Ticker

6/recent/ticker-posts

பெருந்தெய்வங்களும் சிறுதெய்வங்களும்

 

பெருந்தெய்வங்களும் சிறுதெய்வங்களும்

                இயற்கையின் ஆற்றலைக்கண்டு அஞ்சிய மனிதன் அதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம் என்று நம்பினான். அதனடிப்படையில் இயற்கை வழிபாடுகளும்   விழாக்களும் தோற்றம் பெற்றன. பலிகள் தருவதன் மூலம் இயற்கையினை வயப்படுத்தி விடலாம் என்ற அடிப்படையில் விழாக்களும் கொண்டாட்டங்களும் தோன்றின. காலப்போக்கில் இயற்கைக்கு உருவம் கொடுத்து வழிபடத் தொடங்கினர்.

                சித்தர்கள் இறைவனை அருரமாய் வணங்கியவர்கள் சிலைவைத்து   கோயில்கட்டி வழிபடுவதை மூடத்தனமாக எண்ணினர். சித்தர் பாடல்கள் சிந்தனையையும் தெளிவையும் தரவல்லன சிவவாக்கியர் சிலைகளை வணங்குபவர்களை

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொ ணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

என்று கூறுகிறார்.

கோயிலிலா ஊரில் குடியிருக்க வேண்டாம்என்ற பழமொழி தமிழகத்தில் வழங்கி வருகிறது. ஆதி மனிதன் இயற்கையோடிருந்து இயற்கையை வழிபட ஆரம்பித்தான். அவ்வழிபாட்டில் இருந்தே சிறுதெய்வங்கள்   பெருதெய்வங்கள் எழலாயின எனலாம். சிலம்பில் கூடஞாயிறு போற்றுதும்என்ற இயற்கை வழிபாட்டைக் காணமுடிகிறது. சிறு தெய்வங்கள் பெருதெய்வங்கள் பற்றி ஆராய இவ்வியலானது முற்படுகிறது.

 

 

 

தெய்வம் - கடவுள் வேறுபாடு

                அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று”1

என்று கொன்றை வேந்தனில் ஒளவையார் குறிப்பிடுகிறார்.

மாதா   பிதா   குரு   தெய்வம்   இந்நால்வரும் வணக்கத்திற்குரியவர்கள் என்று குறிப்பிடுவது தமிழ் மரபு.“தாயிற் சிறந்த கோவில் இல்லைஎன்றுதாயை விட உயர்ந்த தெய்வம் இல்லைஎனவும் நம் கண்முண்னே நடமாடும் தெய்வமாக தாய் இருக்கிறாள் என பிற்கால அறநூல்கள் குறிப்பிடுகின்றன.

                வேதங்களிலும்   புராணங்களிலும்   இதிகாசங்களிலும் விண்ணுலக வாழ்வு பற்றியும் தேவர்கள்   தேவேந்திரன் தேவதைகள்   தேவகணங்கள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. உலக உயிர்கள் அனைத்தும் தெய்வங்களால் இயங்கப்படுகின்றன என்றும்   ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு தொழிலை செய்வதாக கூறுகின்றனர்.

                வேதகால தெய்வங்களான சிவன்   பார்வதி   திருமால்   அக்னி போன்றவற்றை தெய்வங்களாக மக்கள் உபநிடதங்களிலும்   புராணங்களின் வழியாகவும் வழிபடலாயினர்.

கடவுள்   இறைவன் என்றெல்லாம் பெயர் பெற்ற  பரம்பொருளுக்கும் விலங்கு   மனிதன் போன்ற ஆன்மாக்களுக்கு இடைப்பட்ட அதிசயங்களை செய்யக்கூடிய திருநிலையே தெய்வநிலை2 எனலாம்.

கடவுள்

                உலகம் உண்டென்று கருதின் அதனைப் படைத்தோன் ஒருவன் இருத்தல் வேண்டும். அவனே கடவுளாவான்.தொல்காப்பியர் காலத்திலேயே கடவுள்   தெய்வம் பற்றிய கொள்கைகள் இருந்தன. கடவுள் வழிபாடு பழந்தமிழர் வழிபாடாக

                மாயோன் மேய காடுறை உலகம்

                சோயோன் மேய மைவரை உலகம்

                வேந்தன் மேய தீம்புனல் உலகம்

வருணன் மேய பெருமணல் உலகம்3”(தொல்.பொ.அகம்.951)

எனத் தொல்காப்பியர்அடி சுட்டுகின்றன.

                கடவுளை ஒவ்வொரு சமயத்தினர் ஒவ்வொரு விதமாக அழைக்கின்றனர். கடவுள் என்னும் பதம் உள்ளத்தைக் கடந்து நிற்பவன்4 என்பதை குறிக்கும். “கடவுள் என்னும் சொல் தொழிலாகு பெயராய் மனம்   மொழி மெய்களை கடந்த பரம்பொருளை உணர்த்துகிறது என்பர்”5. இச்சொல் தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் நூல்களில் அமரர்   முனிவர் முதலிய உயர்ந்தோர் என்னும் பொருளில் வழங்கியுள்ளது.

                கடவுள் என்பவர் நிலைபெற்று இருக்கிறார் என்றும்   உலகம் கடவுளின் உடலாக அமைந்துள்ளது என்றும்   அதை இயக்குகிற ஆற்றல் அவர் மனத்திற்கு உண்டு என்றும் கூறுகின்றனர். கடவுளின் எண்ணத்தினால்தான் இவ்வுலகம் படைக்கப்பட்டுள்ளது. கடவுள் நன்மையின் முழு உருவமாக விளங்குபவர். முழு அறிவு   முழுவன்மை   முழுநீதி பொருந்தியவர்   கடவுள் செயலாற்றும் திறம் பெற்றவர். சடத்தன்மையற்றவர். இவ்வுலகத்தை ஆக்குபவராகவோ அன்றி இயக்குபவராகவோ அல்லது வெறுமனே இருப்பவராகவே விளங்குகிறார். தான் ஒருவனே ஆதி ஆன்மாவாகவும் உலகாகவும் பரிணமித்து இருக்கிறார். இவ்வுலகத்தை உடலாகப் பெற்று இயக்குகிறார். வரையறையற்றவராகவும் வரையறை உள்ளவராகவும் உள்ளவர் கடவுள். எங்கும் நிறைந்த முழுமை உடையவராக விளங்குகிறார்.

                எடுத்த செயல் இனிதே நிiவேற முதலில் கடவுளை வணங்குவது தமிழ்மரபு என்றே கூறலாம். முன்னோர்கள் தாம் செய்த தோத்திர  சாத்திர   இதிகாச   புராண இலக்கியங்களில் எல்லாம் கடவுள் வாழ்த்துக் கூறும்போது உலகத்தையே இறைவனாக நினைத்து பாடியிருக்கின்றனர்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்”6

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்”7

ஆதிபகவன் முதற்றே உலகு”8

என்று உலகத்தையே கடவுளாக நினைத்து பாடியிருக்கிறார்கள்.

தெய்வம் - விளக்கம்

தெய்வம் என்னும் சொல்தேவம்என்று குறிக்கப் பெறும். தெய்வயானை (தேவகுஞ்சரி) தெய்வக் குமரன் (தேவ குமரன்)   தெய்வக் கொடை (தேவக்கொடை) தெய்வக் கணிகை (தேவதாசி) தெய்வ வழிபாடு (தேவ கமுக்கம்) தேவ ரகசியம் என்றெல்லாம் சுட்டப் பெறுகின்றன.

தேவம்   தேவர்   தேவன்   தேவதை போன்ற சொற்கள்தெய்வம்’9 என்ற சொல்லின் பொருள். தெய்வம் என்பது மனித நிலையினின்று சற்று உயர்ந்தது தெய்வநிலை என்று கூறுகின்றனர். தெய்வம் என்பது பிறப்பு இறப்பு அற்றது. பரமாத்மாவாக திகழக் கூடியது. அனைத்து உயிர்களின் ஜீவாத்மாக்களை பரமாத்மாவாகிய தெய்வம் தன்னுள் கொண்டு விளங்குகிறது. தெய்வம் ஜீவாத்மாவை முக்தி பெறவைத்து பரமாத்மா என்னும் ஜோதியுள் கலந்துவிட செய்கின்றன.

திருவள்ளுவர் மனிதனையே தெய்வநிலைக்கு உயர்த்துகிறார். மண்ணுலகில் வாழும் மனிதன் செவ்வியல் வாழ்க்கை வாழ்வானாயின் அவன் தெய்வம் தங்கக்கூடிய விண்ணுலகில் வைத்துப் போற்றப்படுவான் என்பதை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும்  

தெய்வத்துள் வைக்கப் படும்.10

(குறள் - 50)

என்ற குறள்வழி மூலம் அறியலாம் சங்க இலக்கியம் முதல் தற்காலம் வரை தெய்வங்கள் பல்வேறு வகைகளில் வழிபட்டு வந்தாலும்   பக்தி இலக்கிய காலகட்டமாகிய கி.பி.ஏழாம் நூற்றாண்டை சார்ந்த ஆழ்வார்களும்   நாயன்மார்களும் இறைவனை தன் பக்தியால் நேரிடையாக கண்டு ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி இசைத்தமிழ் கருவூலமாய் பாமாலை புனைந்து வழிபடலாயினர்.

பெருந்தெய்வங்கள் சிறுதெய்வங்கள் வேறுபாடு

                பெருந்தெய்வங்கள் வேதங்களோடு தொடர்பு உடையவை. பெருந்தெய்வங்களை வேதக்கால கடவுள் என்றே கூறலாம்.

சிவன்   திருமால்   முருகன்   இந்திரன்   பிரம்மன்   பார்வதி போன்ற தெய்வங்கள் பெருந்தெய்வங்கள்”11. பெருந்தெய்வங்களுக்கு ஆகம முறைப்படி கோயிலும் திட்டவட்டமான பூஜை   திருவிழாக்களும் உண்டு. வழிபாட்டு முறையில் பிராமணிய முறை பின்பற்றப்படுகின்றன. திருவிழாக்களும் குறித்த காலத்தில் நடைபெறுகின்றன.

                பெருந்தெய்வங்கள் பெரும்பாலும் புராணங்களோடு தொடர்பு உடையவை. பெருந்தெய்வங்களில் பெரும்பாலும் சைவ வணக்க முறையே பெருந்தெய்வ வழிபாடாக் காணப்படுகின்றது என்று ஆறுமுகநாவலர் குறப்பிடுகின்றார்.

                சிறுதெய்வங்கள் வேதக்கடவுளோடு பெரும்பாலும் தொடர்பு கொள்ளாதவை. முழுமுதற் கடவுளாகக் கருதி வணங்கப்படாதவை. பூசை   திருவிழா முதலியவற்றில் திட்டவட்டமான வரையறை கிடையாது. பிராமணர் அல்லாதோர் பூசாரியாக இருப்பர். கோயில் போன்ற அமைப்பு பெரும்பாலும் கிடையாது. சிறுதெய்வங்கள் பற்றி செவிவழிச் செய்திகளும் கர்ணபரம்பரைக் கதைகளும் உண்டு.

                சிறுதெய்வங்கள் ஊரைக் காக்கும் தெய்வமாகவும்   காலரா அம்மை போன்ற கொடிய நோயிலிருந்து காக்கும் தெய்வமாகவும் நம்பப்படுகின்றன.

                சிறுதெய்வங்களான மாரியம்மன்   காளியம்மன்   அங்காளம்மன்   பத்ரகாளி   எல்லையம்மன்   கன்னிமார்   செல்லாண்டியம்மன்   முனியப்பன்   அய்யனார்   கருப்பண்ண சாமி   வீரபத்ர சாமி   போன்ற தெய்வங்களை சிறுதெய்வங்கள் என அழைக்கின்றனர்

                சிறுதெய்வங்களில் மாரியம்மன்   அய்யனார் போன்றவை பெரும் பாரம்பரிய மரபை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்றும் இதனால் இத்தெய்வங்களை இடைநிலைப்பட்ட தெய்வங்கள் என்றும் கூறுகின்றனர்.12

                தெய்வங்களில் சிறுதெய்வங்கள்   பெருந்தெய்வங்களுக்கிடையே மிகுந்த வேறுபாடு உண்டு. சமூகத்தில் உயர்வு   தாழ்வு   அதிகம்   குறைவு போன்ற பாகுபாடுகள் தோன்றி வளர்ந்துள்ளதை போல மனிதப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் பெருந்தெய்வம்   சிறுதெய்வம் என இரு வகையாக பிரிந்து காணப்படுகிறது.

                இயற்கை வழிபாடாக தொடங்கிய தெய்வம்   சிறுதெய்வமாக மலர்ந்தது. பின்னர் சிறு தெய்வங்களில் இருந்து பெருந்தெய்வம் தோன்றின. சிறுதெய்வம்   பெருந்தெய்வம் இடையேயுள்ள வேறுபாட்டை இங்கு காண்போம்.

             பெருந்தெய்வங்களை சிவன்   திருமால்   முருகன் என்ற பிரிவில் அடக்குவர்.

             நாட்டுப்புற தெய்வங்களை சிறுதெய்வங்கள் என்பர். பெரும் எண்ணிக்கை உடையவை

             பெருந்தெய்வங்கள் ஆதி அந்தம் இல்லாதவை

             சிறுதெய்வங்கள் பிறப்பு இறப்பு உள்ளவை

             பெருந்தெய்வங்கள் எல்லையற்ற ஆற்றலுடையவை

             சிறுதெய்வங்கள் குறிப்பிட்ட ஆற்றலுடையவை

             பெருந்தெய்வங்களுக்கு உயிர்பலி இல்லை

             சிறுதெய்வங்களுக்கு உயிர்பலி உண்டு

             பெருந்தெய்வங்களுக்கு பிராமணர் பூசாரியாக இருப்பர்

             சிறுதெய்வங்களுக்கு பிராமணர் அல்லாதோர் பெரும்பாலும் பூசாரியாக இருப்பர்

             பெருந்தெய்வங்களில் பெண் தெய்வங்கள் திருமணமானவை

             சிறுதெய்வங்களில் பெண் தெய்வங்கள் திருமணம் ஆகாதவை

             பெருந்தெய்வங்களுக்கு ஆகமவிதிப்படி கோயிலமைப்பு உண்டு

             சிறுதெய்வங்களுக்கு பெரும்பாலும் கோயிலமைப்பு இல்லை

             பெருந்தெய்வங்களுக்கு ஸ்தல புராணங்கள் உண்டு

             நாட்டுப்புறத் தெய்வங்களுக்கு செவிவழிச் செய்தி   நாட்டுப்புறக் கதைகள் உண்டு

             பெருந்தெய்வங்களுக்கு பூசை   திருவிழா முதலியவற்றில் திட்டவட்டமான வரன்முறை உண்டு

             சிறுதெய்வங்களுக்கு பூசை   திருவிழா முதலியவற்றில் வரையறை இல்லை

             பெருந்தெய்வங்கள் கருங்கல் சிலை   செம்பு வடிவச் சிலை உடையவை

             சிறுதெய்வங்கள் மாடங்கள்   சுதைகள்   கல்   மரம்   புற்றுகளில் உறைபவை

             பெருந்தெய்வங்கள் சாந்த உருவமுடையவை

             சிறுதெய்வங்கள் கொடூர உருவமுடையவை

             பெருந்தெய்வங்கள் எழுத்திலக்கியத்துடன் தொடர்படையவை

             சிறுதெய்வங்கள் நாட்டுப்புற இலக்கியத்துடன் தொடர்புடையவை

             பெருந்தெய்வங்கள் பெரும் பாரம்பரிய மரபைச் சார்ந்தவை

             சிறுதெய்வங்கள் சிறு பாரம்பரிய மரபைச் சார்ந்தவை

இவை பெருந்தெய்வத்திற்கும்   சிறுதெய்வத்திற்கும் உள்ள வேறுபாடாகும

கருத்துரையிடுக

0 கருத்துகள்