Ticker

6/recent/ticker-posts

கண்ணகி நாட்டுப்புறத் தெய்வம்

 

கண்ணகி நாட்டுப்புறத் தெய்வம்

                கண்ணகி நாட்டுப்புற மக்களின் தெய்வமாக போற்றப் பெறுகிறாள். கண்ணகியின் கதை நாட்டுப் புற பண்பாட்டு விழுமியங்களுடன் பன்னெடுங்காலமாக நிலவிவந்ததாதல் வேண்டும் இலங்கையிலும்   கேரளத்திலும் கண்ணகி கதை வாய்மொழி இலக்கியத்தில் பரவலாக இடம்பெறுகிறது. தமிழக வாய்மொழி இலக்கியத்திலும் கண்ணகி கதை காணப்படுகிறது.

                பாரம்பரியமாக  வழங்கிவந்த கதையினைக் கருவாகக் கொண்டு காவியம் படைத்த இளங்கோ கிராமிய இலக்கியப் பொருள் மரபுகளுக்கும் செய்யுள் மரபுகளுக்கும் சிலப்பதிகாரத்திலே முக்கியத்துவம் தருகிறார்.

                சிலப்பதிகார இலக்கியம் ஒரு காலகட்டம் வரை கற்றார் உலகிற்கு அறிமுகப் படுத்தப்படாமல் இருந்திருக்கிறது என்பதைத் தமிழறிஞர் .வே.சா அவர்களின் குறிப்புக்கள் கூறுகின்றன. அக்காலத் கட்டத்திலும் பத்தினித் தெய்வத்தின் கதை வாய்மொழி இலக்கியமாக மக்களின் உணர்வுகளில் வாழ்ந்து வந்திருக்கிறது என்பார் டாக்டர் நசீம்தீன்

                கண்ணகி தெய்வமானதை நாட்டுப்புறங்களில் தாலாட்டு பாடல்களாகவும்   மீனவர்களின் பாடல்களாகவும் கண்ணகி அதிலே இடம் பெற்றிருக்கிறாள்.

                கண்ணகியே திரௌபதி அம்மன்   சாமுண்டி மாரியம்மண்   பல அம்மன் பெயர்களில் நாட்டுப்புறத் தெய்வங்களாக அழைக்கப்படுகிறாள். நாட்டுப்புறத் தெய்வங்களுக்கு வழிபாடும்   பலியும் தரப்படுகன்றன.

                தாய்மையையும் கருவளத்தையும் போற்றிய தமிழர் அவற்றுக்கு அடித்தளமாகத் திகழும் கற்பையும் போற்றினர். பெண்மை கற்பு வீரம் என்பன தெய்வமாக வணங்கப்படும் மரபுக்குச் சொந்தக்காரர்கள். பழம் பண்பாட்டு களஞ்சியமாக திகழும் சோழமண்டலக் கரையில் தாய்த்தெய்வ வழிபாடும்   ஏழுகற்புடைய பெண்டிர் வழிபாடும் இவற்றுடன் கண்ணகி வழிபாடும் வழிவழியாக நிலைத்து வந்துள்ளது. கற்பு   வெகுளி   வெற்றி   வளப்பம் ஆகிய பண்புகளைக் கொண்ட ஆற்றல் செறிந்த தெய்வமாகக் கண்ணகி கருதப்படுகிறாள் என்பார் .கருணாநிதி”30

                கற்புடை மகளிர்க்குச் சிறப்பொடு வழிபாடு இயற்றுவது தமிழ் மரபு. இவர்கள் இறந்தபின் தெய்வமாக வணங்கப்படுகின்றனர். கண்ணகியும் நாட்டுப் புறங்களில் தெய்வமாக வழிபடப்படுகிறாள்.

                நாட்டுபுறப் பாடல்களில் மிகச் செல்வாக்கு பெற்றவள் கண்ணகி. பூம்புகார் நாட்டுபுறப் பாடல்களில் மீனவர் பால்கள் உள்ளன. அதில்

பாண்டி மக்கள் குலம்

கண்ணகி தாயாரே காப்பாத்து மாதாவே

எந்த ஊரு எந்த நாடு

கண்ணகி தாயாரே காப்பாத்து மாதவே

எங்கெருந்து இங்க வந்த

கண்ணகி தாயாரே காப்பாத்து மாதாவே31”

என்று கண்ணகி தெய்வமாகக் கருதப்படுகிறாள்.

பத்தினியே கண்ணகியே அய்லெசா

பழுதுபடா நாயகியே அய்லெசா

கண்ணகியே மாதவியே அய்லெசா

என்று நாட்டுப்புற பாடல்களில் குறிப்பிடப் படுகிறாள்.

கண்ணகி நாட்டுக்கோட்டை செட்டியர் பெண். கண்ணகி செட்டியர் மகளாக வளர்ந்ததனை நாட்டுப்புற பாடலில் அப்படியே வடிதெடுத்திருக்கின்றனர்.

செட்டி மானகர் மகளாக வந்தாயே

தென்னவன் பதியழியவே சினந்தாயே

வட்ட முலையைத் திருகி விட்டெறிந்தாயே

மாசாத்துவார் மகனை நீயுகந்தாயே

பட்டபுலவற்கு நற்பயன் உகந்தாயே

பதியில் நீலாவெணைப் பதியில் வந்தாயே

எட்டுவரை உன்புகழ் விளங்க வந்தாயே

இனிய கற்புடைய கண்ணகை எனும் தாயே?32

                இப்பாடல் கண்ணகியின் வாழ்க்கை நிகழ்ச்சியை படம் பிடித்து காட்டுகின்றனர். வழிபாட்டுப் பாடல்களில் கண்ணகித் தெய்வம் வேளாளப் பெருமக்களை மட்டுமன்று பரதவர்களையும் கரைபுரண்டு வரும் காவிரித் தாயையும் வழிபாடு செய்து   தங்கள் வாழ்விலும் செல்வம் வெள்ளம் போல் பெருக வேண்டும்   தம்முடன் பிறந்த மங்கையர்க்குக் திருமணம் சிறப்பாக நடைபெறவேண்டும என்று வேண்டிக்கொள்கின்றனர். இது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியைப் புலப்படுத்துகிறது.

காவிரி தண்ணி வருது

கரப்பாரான் எல்ல வருது

காவிரிபூம் பட்டணத்து

கரைகள் தாண்டிவருது

தாண்டிவருந் தண்ணீரிலேஎங்கள்

கண்ணகி ஏறெடுத்துப் பார்த்தால்

தாழ்வெல்லாம் நீங்கனும்

தனபாக்கியம் அமர்ந்து வரும்

தனம் வந்த காலத்தில்

தங்கைக்கு கல்யாணம்

கடனில்லா கல்யாணம்

கல்யாணம் முடிந்தவுடன் - எங்க

தாயைக் கும்பிடுவோம்

தனிமோளம் வச்சடிப்போம்”33

                கண்ணகி நாட்டுப்புறத் தெய்வமாக நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. நாட்டுப்புற மக்களின் வேலைகளிலும் வாய்மொழி பாடல்களிலும் ஒப்பாரி   நடவுப்பாட்டு   தாலாட்டு போன்ற வாய்மொழி பாடல்களில் கண்ணகி நாட்டுபுற மக்களுக்கு தெய்வமாக காட்சியளிக்கிறாள்.

கண்ணகியை மாரியம்மனாக வழிபடுதல்

                சிலம்பில் பத்தினிப் பெண்ணாக காட்சியளிக்கும் கண்ணகியே பிற்காலத்தில் மாரியம்மனாக வழிபடுகின்றனர் என பல்வேறு அறிஞர்கள் கருதுகின்றனர். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கற்கோயில் எழுப்பி வழிபட்டான். கண்ணகி மதுரை எரித்த நாள் முதல்; பன்னிரண்டு ஆண்டுகள் பாண்டிய நாட்டிலே மழை இல்லாமல் நாட்டில் பசியும்   பஞ்சமும் ஏற்பட்டது என்றும் இதற்கு காரணம் கண்ணகியே என்றும் கொற்கையிலிருந்து வெற்றிவேற்செழியன் கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லர்களை பலி கொடுத்தான் என்றும் அதனால் நாட்டில் நல்ல மழை பொழிந்து நோயும் துன்பமும் நீங்கியது என உரைபெறு கட்டுரை வாயிலாக அறியமுடிகிறது

மழைத்தரும் கடவுள் மாரியம்மன் இந்த மாரியம்மனே கண்ணகி என்று கூறமுடிகிறது.

உரைபெறு கட்டுரை

                அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங்

கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயும்

தொடரக் கொற்கையிலிருந்து வெற்றிவேற் செழியன்

நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்

கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய

பத்தினியால் மதுரை எரிவாய்ப்பட்ட அந்நாள் முதலாகப் பாண்;டியனின் நாட்டிலே மழை பெய்து   நிலம் எல்லாம் வறண்டு போயிற்று. மக்கள் வறுமை எய்தினர். வெப்பு நோயும்(கால்ரா)   கொப்புளங்களும் (அம்மை) மக்களைத் தொடர்ந்து பற்றி வாட்டின. கொற்கையில் இருந்தவனான வெற்றிவேற் செழியன் நங்கைகக்கு அவள் சீற்றம் தணியுமாறு   ஆயிரம் பொற்கொல்லர்களை கொன்று   களவேள்வியால் விழாவும் நடத்திச் சாந்தியும் செய்வித்தான். அதனால் அவள் சீற்றமும் தணிந்தது. நாட்டிலே மழை வளம் பெருகி பாண்டி நாடு எங்கணும் மண் குளிரும்படியாக மழைபெய்ய   நோயும் துன்பமும் நீங்கி   மக்கள் இன்பத்தில் மூழ்கினார்கள்   மதுரை மாநகரைக் கண்ணகிதேவி எரித்துவிட்டபடியால் பாண்டி நாட்டின் துறைமுக நகரான கொற்கையில் விழா எடுத்தான் வெற்றிவேற்செழியன்

                உரைபெரு கட்டுரையின் முதற்பகுதிஅன்று தொட்டுஎன்பதற்குகண்ணகிதேவி   சீற்றங்கொண்டு மதுரையை எரித்த நாள் தொட்டுஎன்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் .பொ.சி.

                உரைபெறு கட்டுரை இன்னும் சில செய்திகளையும் தருகின்றன.

                வெற்றிவேற்செழியன் கொற்கையில் விழா எடுத்ததை கேள்விப்பட்டு  அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய   மழை தொழில் என்றும் மாறாதாயிற்று

                அது கேட்டுக் கடல்சூழ் இலங்கைக்

கயவாகு வென்பான்   நங்கைக்கு நாட்பலி பீடிகை

கோட்ட முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து

வரந்தரும் இவளென ஆடித்திங்கள் அகவையில்

ஆங்கோர் பாடி விழாக்கோன் பன்முறையேடுப்ப 

மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா

விளையுள் நாடு ஆயிற்று

பாண்டிய மன்னனும்   கொங்கு இளம் கோசரும் பத்தினித் தெய்வத்தை வழிபட்டு நன்மை அடைந்த செய்தியைக் கேட்டு கடலால் சூழப்பெற்ற இலங்கையின் வேந்தனான கயவாகுவும் கேள்வியுற்றான் அங்கு நாளும் பூசை செய்து வழிபட வேண்டிப் பலிபீடம் நிறுவிப் பின் கோட்டம் அமைத்தான். ‘நமக்குற்ற துன்பங்களைப் போக்கி வரம் தருபவள் இவள்!’ என்று கருதி   அவன் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் விழா எடுத்தான். அதனால் வானம் குன்றாது மழை பொழிந்தது. பல வகையான வளங்களும் பெருகின. இலங்கையும் பொய்யாத விளைவினைக் கொண்ட வளநாடானது.”

                வெற்றிவேற்செழியனும்   கொங்கு இளம் கோசரும் கயவாகுவும் பத்தினித் தெய்வத்தை வழிபட்டு நலம் பெற்றனர் என்ற செய்தியைக் கேட்டு சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் அமைத்து நித்தம் விழாவணி நடத்தினான். அதனால் சோழநாடு மேலும் வளம் பெற்று மேம்பாடுற்றது.

                உரைபெறு கட்டுரையின் மூலம் ஓர் உண்மை புலப்படுகிறது. “ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்பஎன்று உரைபெறுகட்டுரை கூறுவதால் சிலப்பதிகாரக் கதை முடிந்த பின் கண்ணகிக்கு விழா எடுத்த மன்னர்கள் ஆண்டுதோறும் ஆடித் திங்களில் அதனைத் தொடர்ந்து நடத்தினார்கள் என்ற உன்மை துலங்குகிறது. இன்றும் தமிழ் மக்கள் கண்ணகிவிழாவை ஊர்தோறும் கொண்டாடி வருகின்றனர். இன்றென்ன கண்ணகிக் காப்பியம் தோன்றிய அன்று தொட்டே பத்தினி வழிபாட்டை நடத்தி வருகின்றனர். பாண்டியன் பத்தினி விழாவைக் கொற்கையில் கொண்டாடியது கேட்டு   கொங்கிளங் கோசரும்   சோழனும்   இலங்கைக் கயவாகுவும் கொண்டாடினார்கள். அந்த மன்னர்களெல்லாம் கொண்டாடியதைக் கண்டும் கேட்டும் தமிழ் நாட்டு மக்களெல்லாம் கண்ணகி விழாவைத் கொண்டாடத் தொடங்கினர். ஆனால் எப்படியோ எப்போதோ கண்ணகி விழாவானது  மாரி விழாஎன்ற மாற்றுப் பெயர் பெற்றுவிட்டது!34

                இன்று நாம் ஊர்தோறும் மாரியம்மன் கோயில்களைக் காணமுடிகிறது. பெருநகரங்களிலும் பேட்டைதோறும் மாரியம்மன் கோயில்களைப் பார்க்கிறோம். அந்தக் கோயில் தோறும் தமிழர் வீடுதோறும் ஆடித்திங்களிலே மாரியம்மனுக்கு விழா எடுப்பதும் வழக்கமாகிவிட்டது.

                கண்ணகியம்மன் மாரியம்மனாக மாறியது எதனால் என்றால் கொற்கையிலும் கொங்கு மண்டலத்திலும்   குட நாட்டிலும்   இலங்கைத் தீவிலும் மழைவரம் வேண்டியே மன்னர்கள் விழா நடத்தினர் என்பதனை   அவர்கள் விழா நடத்திய பின்னர்  நாடுமலிய மழைபெய்து பிழையா விளையுள் நாடாயிற்றுஎன்றும்  மழை தொழில் என்றும்   மாறாதாயிற்றுஎன்றும் உரைபெறு கட்டுரை கூறுவதை நோக்கத்தக்கது.

                கண்ணகிக்கு மன்னர்கள் விழா எடுத்தனர் தங்கள் நாட்டில் மழை பெய்ய வேண்டும். மழைத்தரும் கடவுளாக கண்ணகி வழிபடபட்டிருக்கிறாள். அப்பொழுது தொடங்கிய மழைவழிபாடு மாரியம்மன் வழிபாடாக மலர்ந்தது எனலாம்.

                “‘மாரிஎன்னுஞ் சொல்மழைஎன்று பொருள் தரும் சிலப்பதிகாரக் காலத்திற்குப் பின்னர் மன்னர்களும் மக்களும் மழையைக் கோரியே கண்ணகிக்கு விழா எடுத்தனராதலால்   காலப் போக்கினுள் மழை தரும் தெய்வத்தின் பெயர்மாரிஎன்றும் மாறி வழங்கியிருக்கக் கூடும்”35

                மாரியம்மனைப் பற்றிய நாட்டுப்புற நம்பிக்கைகள்  நாட்டுப்புற மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன.

                நாட்டில் மழை பெய்து நாடு செழிக்க மாரியின் அருள் வேண்;டுமென மக்கள் நம்பினர். மாரியை வேண்டி வரங்கிடந்தமையால்தான் மாரி எனப் பட்டாளோ என எண்ண வேண்டி உள்ளது. நாட்டில் உண்டாகும் அம்மை முதலிய நோய்களுக்கு மாரிதான் காரணம் என்றும் அதனை நீக்குவதும் மாரிதான் என்றும் மக்கள் நம்புகின்றனர்.36 அத்தகைய மாரிக்குச் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாவிட்டால் பிழைக்க முடியாது என்று மக்கள் நம்பினர் என்பதை

ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆவாது

மாரிகடன் தீர்த்தவர்க்கு மனக்கவலை தீருமம்மா

என்ற வரிகள் காட்டுகின்றன.

                இன்றும் கிராமபுறங்களில் அம்மை போன்ற நோய்கள் வந்தால் வேப்பிலை அரைத்து மேனியெல்லாம் பூசுகின்றனர். மாரியம்மன் கோயிலுக்கு சென்று நீர் ஊற்றி வேப்பிலையை மாரியம்மன் மடியில் வைத்து வழிபடுகின்றனர் பின்னர் அந்த வேப்பிலையை எடுத்துக் கொண்டு வந்து அம்மை நோய் கண்டவர்களுக்கு கொடுக்கின்றனர். அம்மை நோய் கண்ட வீட்டில் யாரும் ஆச்சாரம் இல்லாமல் நுழைய கூடாது என்றும் மீறினால் நோய் தீவிரம் ஆகும் என்றும் மக்கள் நம்புகின்றனர். அம்மை நோய் கண்டவர்களுக்கு மீன்   கருவாடு கொடுக்கின்றனர். மீன் கொடுத்தால் அம்மை குணமாகும் என்று இன்றும் நாட்டுபுற மக்கள் நம்புகின்றனர்.

                தமிழ் நாட்டில் நடைபெறும் மாரியம்மன் விழாக்களிலே கூழ்   கருவாடு   முருகைக் கீரை முதலியன வைத்து படைக்கப்படுகின்றன. இவையனைத்தும் மக்கள் பஞ்சம் நேர்ந்த காலத்தில் பயன்படுத்தும உணவு வகையாகும். வெற்றிவேற் செழியன் பாண்டிய நாடு பஞ்சத்தால் அவதியுற்றகாலை மழைவரம் வேண்டி கண்ணகிக்கு விழா எடுத்ததால் பஞ்ச கால உணவைப் படைத்து வழிபட்டிருக்கலாம்37 என .பொ.சி கூறுகிறார்.

                மாரியம்மன் கோயில்கள் எல்லாம் கண்ணகி கோயில்களே எனலாம். மாரியம்மன் விழா ஆடி மாதங்களிலே மக்களால் நடத்தப்பெறுகின்றன. கண்ணகி மதுரையை எரித்த மாதம் ஆடிமாதம். கண்ணகி அம்மனை மழைவேண்டி கண்ணகிக்கு விழா எடுத்த கயவாகு ஆடிமாதம் விழா எடுக்கிறான். அன்று தொட்டு இன்று வரை ஆடி மாதம் மாரியம்மனுக்கு உகந்த மாதமாக திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

                மாரியம்மன் கோயில்களில் விழா நடக்கும் காலங்களில்பூசாரிகள்என்போர் பம்பையும் உடுக்கையும் அடித்துப் பாடி மகிழ்கிறார்கள். அப்படி மகிழும்போது   உள்ளே பரல்களைக் கொண்ட ஒற்றைச் சிலம்பைக் கையில் தாங்கி   அதனை அசைத்து அசைத்து ஒலியெழுப்புகிறார்கள். இரண்டு சிலம்புகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. மாரியம்மன் கோயில்களிலே அம்மன் சிலைக்கு முன்பு உள்ள திருநீற்றுத் தட்டிலே சிலம்பு ஒன்றும் வைக்கப் பட்டிருக்கின்றன. இந்த ஒற்றைச் சிலம்பு சிலப்பதிகாரக் கதையையே நினைவூட்டுகிறது என்றே கூறலாம்.

                இன்றைய தமிழ்பெண்களும் கூட பொற்சிலம்பு அணிந்த கண்ணகியை பற்றிய துயர் தம்மைப் பற்றி விடக் கூடாது என்பதற்காக தங்கத்தினலான கொலுசை பெண்கள் அணிவதில்லை.

                மாரியம்மனுக்கு அம்மைநோய் கண்டவர்கள் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். நோய் அகன்றால் பலியும் கொடுக்கின்றனர். இவ்வழிபாடு வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களை பலி கொடுத்தான் என்று கூறப்படுகின்றன. இவ்வழிபாடு காலப்போக்கில் மனித பலியிருந்து விலங்கு பலியாக ஆகியிருக்காலாம்

                கண்ணகிக்குக் கோயில் எடுத்த ஊர்களிலெல்லாம் மழைபெய்தது. எனவே கண்ணகியை மழைத்தெய்வம் எனக்கருதி மாரியம்மன் என்னும் தெய்வமாகப் போற்றி வழிபட்டு வருகின்றனர்.. கோவலன் கொலையுண்ட நாளுக்குப் பின்னர் பாண்டிய நாட்டில் குருகு நோய் (அம்மை) பரவியது. எனவே குருகுநோயை மாரியம்மனாகிய கண்ணகி தந்த நோய் என மக்கள் கருதியமையால்அம்மை நோய்எனக் குறிப்பிட்டனர் மாரியம்மன் கோயிலில் ஆடுவோர் சதங்கை அல்லது சிலம்பு அணிந்து ஆடுவதை பார்க்கும் கொழுது கண்ணகியை மாரியம்மனாக தமிழகத்தில் வழிபடுகின்றனர். மதுரையை எரித்ததை நினைவூட்டும் வகையில் தீமித்தல் அம்மன் கோயில்களில் இடம் பெற்றது எனலாம். எனவே கண்ணகியே மாரியம்மனாகவும் மழைத்தரும் கடவுளாகவும் கிராமங்கள் தோறும் நகரங்கள் தோறும் மாரியம்மனாக கொண்டாடி வருகின்றனர். இவ்வழிபாடு தமிழகத்தில் மாரியம்மனாக   கேரளத்தில் பகவதி அம்மனாக   கர்நாடகத்தில் மங்களா தேவியாக  ஈழத்தில் கண்ணகித் தெய்வமாக கொண்டாடப்படுகிறாள்.38 அவள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல   திராவிட நாட்டுக்கும் கூட தெய்வமாகிவிட்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்