தொல்காப்பிய உருபியலும் நன்னூல் உருபு புணரியலும்
இவ்வியல் பெயர்களின் முன் வேற்றுமை உருபுகள் சேரும் போது தோன்றும் புணர்ச்சி இலக்கணம் பற்றிக் கூறுகிறது. தொல்காப்பியர் இவ்வியலில் பெயர்களுடன் உருபுகள் புணரும் போது புணர்ச்சி இலக்கண விதிகளை வரையறுத்துக் கூறுகின்றார். பெயரோடு வேற்றுமையுருபு புணரும்போது இடையில் தோன்றும் சாரியை வடிவங்களைப் புணரியல் காட்டுகிறது. உருபியல் எந்தெந்தச் சாரியை எந்தெந்தச் சொற்களுடன் இணையும் என்பதைக் கூறுகிறது.
இவ்வியலில் கூறப்பெறும் கருத்துக்களை
1. சாரியை பெறுவன
உயிரீறு மெய்யீறு முற்றுகர குற்றுகரவீறு
2. சாரியை பெறாது இயல்பாயும் திரிந்தும் வருவன
மெய்யீறு குற்றுகர ஈறு
3.எழுத்துப்பேறு பெறுவது
4.புறனடை– என நான்காகப் பிரிக்கலாம்
நன்னூல்
உருபு புணர்ச்சி – சிறப்பு விதி
உருபு புணர்ச்சிக்குரிய சிறப்பு விதிகளாக பொருட்புணர்ச்சி முடிபை உருபு புணர்ச்சிக்கும் ஏற்றுதல் இரண்டாம் வேற்றுமை புணர்ச்சி மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சி - ஆகியவற்றிற்குரிய சிறப்பு விதிகள் கூறப்படுகின்றன
தொல்காப்பியம்
உயிரீறுகள்:
அ ஆ உ ஊ ஏ ஒள ஈற்றுப்பெயர்கள்:
அ ஆ உ ஊ ஏ ஒள எனும் ஈறுகளையும் இறுதியாகவுடைய பெயர்கள் உருபேற்தும் போது இடையில் இன் சாரியை பெற்றுப் புணரும்.1
தொல்காப்பியம்:
எல்லாம் எனும் சொல் ‘வற்று’ம் ‘உம்’ மும் பெறுதல்:
எல்லாம் எனும் ‘ம’ கர வீற்றுப் பெயர் உருபேற்கும் போது ‘அத்து’ இன் எனும் சாரியைகளைப் பெற்று புணராது ‘வற்று’ எனும் சாரியையைப் பெற்றுப் புணர்கிறது. அவ்வாறு வற்றுச் சாரியை பெற்றுப் புணரும் போது உருபின் பின்னர் ‘உம்’ எனும் சாரியையினையும் பெறுகின்றது.2
நன்னூல்
எல்லாம் எனும் பெயர் புணர்தல்
எல்லாம் எனும் இருதிணைப் பொதுப் பெயர் அஃறிணையில் வரும் போது அதனுடன் ஆறு வேற்றுமைனளுக்குரிய உருபுகளும் வருமொழியாக வந்து புணர்ந்தால் இடையில் ‘அற்று’ எனும் சாரியையும் உருபை அடுத்து முற்றும்மையும் பெறும்.3 அவ்வாறில்லாமல் உயர்தினையில் வரும் போது இடையில் ‘நம்’ எனும் சாரியை பெற்றது உருபையடுத்து முற்றும்மையையும் பெறும்.
தொல்காப்பியம்
எல்லாரும் எல்லீரும் எனும் பெயர்கள்: ‘எல்லாரும்’ எனும்படர்க்கைப் பெயரும் ‘எல்லீரும்’ எனும் முன்னிலைப் பெயரும் உருபேற்கும்போது இறுதியில் நிற்கும் ஒற்றும் ‘உ’கரமும் கெட அவ்விடத்து ‘ர’கர வொற்று நிற்கும். அவை முறையே ‘தம்’ சாரியையும் ‘நும்’ சாரியையும் ஏற்று உருபிற்குப்பின் ‘உம்’ சாரியையினைப் பெற்றுப் புணரும்.4
நன்னூல்
எல்லாரும் எல்லீரும் எனும் பெயர்கள் புணர்தல்:
எல்லாரும் எல்லீரும் எனும் பெயர்கள் நலைமொழியாக நிற்க ஆறு வேற்றுமைக்குறிய உருபுகளும் வருமொழியாக வந்து புணர்ந்தால் எல்லாரும் எல்லீரும் எனும் பெயர்களின் இறுதியிலுள்ள முற்றும்மைகளை நீக்கி விட்டு முறையே ‘தம்’‘நும்’ எனும் சாரியைகள் அவை இருந்த இடங்களில் வந்து பொருந்தும். அவற்றினால் நீக்கப் பெற்ற முற்றும்மைகள் உருபுகளின் பின்னே வந்து பொருந்தும்;.5 (எல்லாரும் எனும் பெயருக்குத் ‘தம்’ சாரியையும்;;;;;; எல்லீரும் எனும் பெயருக்கு ‘நும்’ சாரியையும் சேர்க்க வேண்டும்)
தொல்காப்பியம்
தான் யான் - புணர்தல்;:
தான் யான் என்பன ‘ன’கர ஈற்றுத் தன்மை ஒருமைப் பெயர்கள் ஆகும். அவை உருபேற்கும் போது மேற்கூறப்பட்ட ‘ம’ கர ஈற்று நெடுமுதல் குறுகும் பெயர்களுக்கு உரிய விதியை வேறுபாடின்றிப் பெற்று முடியும்.6
நன்னூல்
தான் முதலிய பெயர்கள் புணர்தல்:
(தான் தாம் நாம் யான் யாம் நீ நீர்) எனும் ஏழு பெயரோடு நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ புணரும் போது நடுவில் ‘அ’கரச் சாரியை வரும்.
நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ புணரும் போது நடுவில் ‘அ’கரச் சாரிiயின் உயிர் வந்த விடத்து ஆறாம் வேற்றுமை உருபுகளோடு புணரும் போது அவ்வேற்றுமை உருபுகளின் முதலில் உயிர் வந்தவிடத்தும் அவ்வேழு பெயர்களின் விகார மொழிகளின் (தன் தம் நம் என் எம் நின் நும்) இறுதியிலுள்ள ஒற்றுகள் இரட்டித்து வாரா.7
தொல்காப்பியம்
ஒருபஃது முதலிய குற்றுகரவீறுகள்: ஒருபஃது இருபஃது முதலிய எண்ணுப்பெயர்கலெல்லாம் உருபேற்கும் போது ‘ஆன்’ சாரியை பெற்று முடிதலும் குற்றமில்லை. அவ்வாறு ‘ஆன்’ சாரியை பெற்றுப் புணரும்போது ஒருபஃது முதலிய நிலை மொழிகளின் இறுதியில் நின்ற –‘அஃது’ என்பது கெடுகின்றது. அப்போது ‘அஃது’ எனும் சொல் ஏறிநின்ற ‘ப’ கர மெய் மட்டும் கெடுதல் இல்லை.8
நன்னூல்
ஒருபது முதலிய எண்ணுப்பெயர்கள் புணர்தல்:
‘ஒன்று’ முதல் ‘எட்டு’ இறுதியாகவுடைய எண்ணுப்பெயர்களோடு புணர்ந்த ‘பத்து’ எனும் எண்ணுப் பெயரின் முன் ஆறு வேற்றுமைகளுக்குரிய உருபுகள் வந்து புணருமிடத்து ‘ஆன்’சாரியை வந்தால் ‘பத்து’ எனும் எண்ணினுடைய ‘ப’கர மெய் ஒன்று மட்டுமே நிற்க அதன் மேல் நின்ற எல்லா எழுத்துக்களும் கெடும். ‘ஒன்பது’ எனும் எண்ணின் முன் உருபுகள் புணரும் போது ‘ஆன்’ சாரியை வந்தால் இவ்வாறே புணரும்.9
தொல்காப்பியம்
‘வ’ கர ஈற்றுச் சுட்டுக்கு ‘வற்று’ச் சாரியை:
சுட்டெழுத்துக்களை முதலாகவுடைய ‘வ’ கர வீற்றுச் சொற்களாகிய அவ் இவ் உவ் என்பன ‘ஐ’ கார வீறும் அவ் ‘ஐ’ காரம் ஏறி நின்ற ‘வ’ கர மெய்யும் கெட்டு நின்று புணர்ந்த சுட்டு முதல் ‘ஐ’ கார வீற்றுப் பெயர்களான அவை இவை உவை என்பனவற்றின் இயல்பில் திரிபின்றி ‘வற்று’ சாரியை பெற்று முடியும்.10
நன்னூல்
‘வ’ கர மெய்யீற்று சுட்டுப்பெயர்கள் புணர்தல்:
அவ் இவ் உவ் - எனும் ‘வ’கர மெய்யை இறுதியாகவுடைய மூன்று சுட்டுப்பெயர்களும் உருபுகளுடன் புணரும் போது ‘அற்று’ எனும் சாரியை பெற்றுப் புணர்தல் விதியாகும்.11
தொல்காப்பியம்
யாது அஃது – எனும் குற்றுகரவீற்றுச் சொற்கள்: அஃது இஃது உஃது முதலிய சொற்களும் ‘யாது’ எனும் பெயரும் உருபேற்கும்போது ‘அன்’ சாரியை பெற்றுப் புணரும். அப்போது அஃது முதலிய சொற்களின் இடையிலுள்ள ஆய்தம் கெட்டுப் புணர்கிறது.12
நன்னூல்
அஃது முதலிய சுட்டுப் பெயர்கள் புணர்தல்: அஃது இஃது உஃது எனும் மூன்று சுட்டுப் பெயர்களும் உருபுகளோடு புணரும் போது இடையில் ‘அன்’ சாரியை வந்தால் நிலைமொழிகளாக உள்ள சுட்டுப் பெயர்களின் இடையிலுள்ள ஆய்தம் கெடும்;.13
0 கருத்துகள்