Ticker

6/recent/ticker-posts

நற்றிணைப் பாலைவழி தலைவன் கூற்று

 

சங்க இலக்கியத் தலைவன்

                பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய பதிணென் நூல்களில் சங்ககாலத் தலைவன் இருநிலைகளை மட்டுமே தனக்கென எடுத்துக் கொண்டுள்ளான். காதல் வீரம் என்ற இருநிலைகளில் தன்னுடைய செயற்பாடுகளைக் கொண்டுள்ள தலைவன் தலைவிக்கான செயற்பாடுகளாக இவ்விரண்டையும் ஆகியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சங்க இலக்கியத் தலைவன் பெண் பொருட்டே வாழ்ந்துள்ளான் என்பது அறியலாகிறது. குறிப்பாகப் பாலையில் அவளின்றி அவன் எண்ணங்கள் இல்லை என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.

                இதனடிப்படையில் நற்றிணையில் அமைந்துள்ள முதல் 30 பாலைத்திணைப் பாடல்கள் வாயிலாகத் தலைவனின் நல்ல எண்ணங்களை அவன் தலைவிக்காகத் தன் வாழ்நாளைக் கழித்த பாங்கை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தலைவனின் இரக்கம்

                தலைவன் முன்னொரு காலத்தில் பொருள்தேடச் சென்றான். பின்னும் பொருள்தேட எண்ணினான். பொருள் மனிதனின் வாழ்விற்கு அச்சாணி. பொருளில்லையெனில் இவ்வுலக வாழ்வில்லை என்றால் மிகையாகாது. ஆனால் தலைவன் அதைத் தலைவிக்காக இப்பொழுது வேண்டாம் எனத் தள்ளி வைக்கிறான்.

                யானே உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்

                மனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே?  (நற்.3)

                தலைவி என்பவள் நினைத்த செயலை முடித்த நிலைக்கு ஒப்பானவள். மாலைப்பொழுதில் நான் அவளுடன் இருக்க வேண்டும். எனவே தான் பொருள் தேடச் செல்லவில்லை எனத் தன் நெஞ்சிடம் கூறுகிறான்.

                முடித்த செயலுக்கு ஒப்பானவள் என்றக் கருத்தைவிட தானின்றி அவளிருந்து அதுவே அவளுக்குத் துன்பமாக விடக்கூடாது என்பதே அவன் கருத்தில் மேலோங்கி நிற்கிறது.

                தலைவி தலைவனுடன் செல்கிறான். செல்வதென்பது இருவரும் மகிழ்வுறும் நிலைதான். செல்கின்ற பாதை இருவருக்கும் துன்பமாகவோ இன்பமாகவோ இருப்பதென்பது பொது நிலைதான். துன்பம் வரின் இருவரும்தான் துன்பம் அடைவர். ஆனால் தலைவன் தன் துன்பத்தைப் பொருட்படுத்துவதில்லை. தன் தலைவி துன்பம் அடைவதை விரும்பவில்லை. எனவே துன்பமில்லா நிலையை உடன் வரும் தலைவியிடம் தலைவன் கூறுகிறான்.

மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்

                நறுத்தனர் பொழிலை கானம்

                குறுப்பல் ஊர யாம்செல்லும் ஆறே                      (நற்.9)

என்கிறான் தலைவன். அதாவது தீங்கு செய்கின்ற எதுவும் நம் வழியில் இடர்படாது என்று பொருள்பட மாமரத்தின் அரும்புகளைக் கோதி மகிழும் குயில்கள். அவை கூவித் திரிகின்ற நல்ல குளிர்ச்சியான சோலைகளின் ஊடே நாம் செல்லப் போகின்றோம். நாம் இளைப்பாறுவதற்குச் செல்லுகின்ற வழியில் சிற்றூர்கள் பல உள்ளன என்கிறான் தலைவன்.

                தலைவன் வீரம் அவனை வெல்வார் எவருமில்லை என்ற நிலையிலும் தலைவிற்காக தலைவியின் மீதுள்ள இரக்கத்தின்பால் வெற்றியை மறைத்துக் கொள்கிறான்.

                கிடின்என இடிக்கும் கோல்நொடி மறவர்

                வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாது

                அமரிடை உறுதர நீக்கி நீர்

                எமரிடை உறுதர ஒளித்த காடே                              (நற்.48)

                தலைவனோடு காட்டில் போர்செய்த மறவர் தோற்று ஓடினர். அச்சமயம் தலைவியைச் சார்ந்தோர் தலைவியைத் தேடி அங்குவர தலைவன் மறைந்து கொள்கிறான். இச்செயல் தலைவி அவளின் உறவினருடன் சேர்ந்து கொள்ள உதவியது. மறைந்ததற்கான காரணம் தான் தோற்றாலும் தலைவியின் தமர் தோற்றாலும் தலைவிக்கு வருத்தம்தான் என எண்ணியே தலைவன் அவ்வாறு செய்கிறான்.

                தோல்வி என்பது தனக்கு இழிவைத் தேடித்தரினும் தன்னுடைய வெற்றி தலைவிக்குத் துன்பத்தைத் தந்துவிடக் கூடாது என எண்ணுகிறான் தலைவன். தலைவனின் இரக்க மனம் இதில் தெரிகிறது.

                தன் பிரிதலால் தலைவி வருந்தும் நிலை முன்னரே துவங்கிவிட்ட நிலையில் தான் இன்னும் தலைவியை நினைத்து அவளை வருத்தமடையச் செய்துவிடலாகாது என எண்ணுகிறான் தலைவன்.

                                அமசில் ஓதி அரும்படர் உறவே  (நற்.105)

                மேற்கண்ட நிலைகளில் தலைவன் தன் மனநலம் உடல் நலத்தைவிட தலைவியின் மனநலம் உடல்நலத்தையே பெரிதாகக் கருதுகிறான்.

தலைவரின் வீரம்

                பண்டையக் காலம் ஆடவனின் வீரத்தை வைத்தே கணக்கிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதை முன்னிலைப்படுத்தியே சங்க இலக்கியத் தலைவன் இயங்குகிறான். அகவாழ்வில் தலைவியின் எண்ணங்கள் கூட வீரத்தோடு பின்னியே பேசப்படுகின்றன. தலைவனின் வருத்தம் தலைவியின் வருத்தம் ஆகியவை தலைவன் பொருட்டு பேசப்படும் பொழுது அவனின் வீரம் பற்றி ஆதிகம் சேப்படுகிறது.

                தலைவியுடன் தலைவன் ஊரைவிட்டுச் சென்று கொண்டிருக்கிறான். தலைவியை முன்போகச் செய்து தலைவியின் பின் சென்று கொண்டிருக்கிறான். இந்த நிலையை விளக்கவந்த ஆசிரியர்

                இளையோன் உள்ளம்

                                காலொடு பட்ட மாரி

                                மால்வரை மிளிர்க்கும் உருபினும் கொடிது  (நற்.2)

எனக் கூறப்படுகிறது.

                இவனின் உள்ளம் கடியது. காற்றோடு சேர்ந்து பெய்து கொண்டிருக்கின்ற மழையில் தோன்றிய பெரிய மலையை புரட்டும் இடியைக் காட்டிலும் அது கடியது என்ற பொருள் கூறப்படுகிறது. ஓர் ஆண்மகனின் உதாரணப் புருஷனாகத் திகழ்கிறான் தலைவன்.

                தலைவன் பிரிந்து நீண்ட நாளாயிற்று. இருந்தும் தலைவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கைத் தலைவியிடம் உள்ளது. காரணம் அவன் கோழை அல்ல வீரன். சொன்ன சொல்லை உயிரென மதிப்பவன் என்ற நம்பிக்கைத் தலைவியிடம் இருப்பதால் தலைவி இவ்வாறு எண்ணுகிறான்.

                தலைவன் கூறிய வார்த்தைகளைக் கார்ப்பான் என்ற எண்ணம் தலைமகளுக்கு உண்டாவதற்குக் காரணம் தலைவன் தலைவிமீது கொண்ட அன்பு பாசம் பரிவு இவற்றை எல்லாம் விட அவனின் வீரம் தான் காரணம் என்ற நிலை தலைவிபால் சங்க இலக்கிய அகப்பாடல்களில் பெரிதும் காணப்படுகிறது. இதற்குச் சான்றாக

                                இனம்சால் வயக்களிறு பாந்தட் பட்டென

                                துஞ்சாத துயரத்து அஞ்சு பிடிப்பூசல்

                                நெடுவரை விடிகத்து இயம்பும்

                                குடுமான் புல்லிய காடு இறந்தோரோ

என்ற பாடல் விளக்குகிறது.

                தலைவன் சென்ற பாதை ஆண் யானை ஒன்று பெரிய மலைப்பாம்பிடம் அகப்பட்டுக் கொண்டது. அது கண்ட பெண் யானை விடும் ஒலி மலையின் பிளப்புகளில் எதிரொலிக்கும். மேலும் கொடிய விலங்குகள் உள்ள அந்தக் காட்டைக் கடந்து சென்றான் தலைவன். எனவே அவர் குறித்த காலத்தில் வருவார் என்கிறாள் தலைவி. அவனுக்குத் தலைவியிடத்து அன்பு பாசம் இருப்பதால் வருவான் என்ற நம்பிக்கையைக் காட்டிலும் வீரமிருத்தலால் வருவான் என்ற நம்பிக்கையே தொக்கி நிற்கிறது.

தலைவி மீது அன்பு காட்டல்

                உண்மையைச் சொல்லும் இதயத்தைத் தலைவன் அன்போடு கடித்து கொள்கிறான். அதற்கான காரணம் தலைவி மீது தலைவன் அன்பே காரணமாகிறது.

                                ……………………………………… யாம் இவள்

                                கணங்கு அணி ஆகம் அடைய முயங்கி

                                பிரிந்துறை வாழ்க்கை புரிந்து அமையலையே                         (நற்.52)

அதாவது தலைவியின் தேமல் படர்ந்த மார்பை அடையப் பொருந்திச் சிறந்த இனிய தழுவலினின்று யாம் நீங்காமல் இருக்கிறோம். ஆனால் நெஞ்சே நீ செய்யும் தொழிலைச் சிறப்பாக எண்ணி நாள்தோறும் பிரிந்திருக்கும் வாழ்க்கையை விரும்பி அமைதி கொள்ளாதிருக்கின்றாய் என்கிறான் தலைவன்.

                தலைவனின் இதயம் பொருளுக்காக ஆசைப்படுகிறது. அதுபோது முன்னர் நடந்த நிகழ்வை எண்ணிப் பார்க்கின்றான்.

                                குன்றுஊர் மதியம் நோக்கி நின்று நினைத்து

                                உள்ளினென் அல்லெனொ யானே முள்ளேயிற்று

                                திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்

                                எமதும் உண்டு ஓர்மதிநாட் திங்கள்

                                உயர்மலை உம்பரஃது எனவே….                            (நற்.62)

                முன்னொரு நாள் பொருள்தேடிப் பிரியும்போது காட்டின் இடையில் ஊர்ந்து செல்லும் திங்களைப்பார்த்து முள்போன்ற பற்களையும் திலகம் பொருந்திய மனம் கமழும் அழகிய நெற்றியையுமுடைய நிறைமதியான திங்கள் ஒன்று எமக்கு உரிமையானதும் உள்ளது. அது உயர்ந்த மலையின் அப்பாடல் உள்ள ஊரில் உள்ளது என அன்பு நிறைந்த மனதுடன் நினைத்துப் பார்க்கின்றான்.

இறுதியுரை

                மேற்கண்டவாறு நற்றிணைப் பாலையின் தலைவன் தலைவிமீது இரக்கம் தலைவி மீது அன்பு தலைவிக்காக வீரம் என்ற நிலைகளில் பொருந்திச் செல்கின்றான். இந்நிலையில் தலைவன் தன்வாழ்க்கையை எண்ணங்களை தலைவிக்காக மட்டும் அர்ப்பணிப்பது தலைவியே தன் வாழ்வின் எண்ணம் என்னும் வழியிலேயே வாழ்தல் என இப்பாடல்களின் வழி உணரமுடிகிறது.

 

ஆதார நூல்

1. நற்றிணை (மூலநூல் விளக்கம் தெளிவுரை)

2. சங்க இலக்கியம் எட்டுத்தொகை நூல்கள்

 

                                                               

கருத்துரையிடுக

0 கருத்துகள்