Ticker

6/recent/ticker-posts

சிலப்பதிகாரத்தில் புராணப்பாத்திரங்கள்

சிலப்பதிகாரத்தில் புராணப்பாத்திரங்கள்

                புராணம் என்பதற்குப்பழமைஎன்று பொருள். ஆங்கிலத்தில் இதனைஆலவாஎன்றும்  புராணவியலை ஆலவாழடழபல என்றும் கூறுகின்றனர்.    

                தமிழில்புராணம்  புராணக்கதை  தொன்மம்  புனைகதை  புராண மரபுக்கதை  தொல்கதைஎன தமிழில் வழங்குகின்றனர்.

தொன்மை தானே உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே              (தொல்: 235)

என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தொன்மம் என்ற சொல் உருவாக்கப்பட்டது என டாக்கடர் சு.சக்திவேல் கூறுகிறார்1.

தமிழ் இலக்கியங்களுள் புராணம் என்ற சொல் மணிமேகலையில்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரங்க.சுப்பையா கூறுகிறார். பழமையான பண்புகள் நிறைந்த நாட்டுப் பாடல்களின் வாய்மொழிக் கதை வடிவமே புராணம் ஆகும். பழைய மரபையும் மரபுக் கதைகளையும் புராணம் பேசுகிறது என்றும்  நச்சினார்க்கினியர் போன்ற இலக்கண உரையாசிரியர்கள் மாபுராணம் என்ற இலக்கண நூலிலிருந்து வெண்பா வடிவான சில சூத்திரங்களை மேற்கோள் காட்டுகின்றார்கள் என அரங்க.சுப்பையா கூறுகிறார்2.

அதர்வன வேதகாலத்திலே புராண நூல்கள் சிறந்த இலக்கியங்களாகக் கருதப்பட்டிருக்கின்றன என்றும்  புராணம் என்ற சொல் உபநிடதங்களிலும் சாஸ்திரங்களிலும் காணப்படுகின்றன என புராண ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.அமரசிம்மன் போன்ற பழைய நிகண்டாசிரியர்கள் புராணம் என்னும் நூல்உலகத்தோற்றம்  ஒடுக்கம்  மனுவந்தரம்  முனிமரபு  அரசமரபுஆகிய ஐந்து இலக்கணங்களையும் உடையதாக இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள். ஆனால் முற்காலத்துப் புராணங்கள் மட்டுமே இந்த ஐந்து இலக்கணங்களையும் உடையனவாக இருக்கின்றன எனக் கூறிச் செல்கிறார் பேராசிரியர் வீ.ஆர் இராமசந்திர தீட்சிதர்3.

புராணத்தில் இல்லாததென்ன! மறைகளிலுள்ள வேள்விகள் பிரும்மா முதல் கொசு ஈறாக உள்ள உயிரினங்களின் படைப்பு  பிரமாண்டத்தின் அமைப்பு  நவக்கிரக மண்டலம் அவைகளின் சலனம்  அதனாலுண்டாகும் நன்மை தீமைகள்  சிருங்காரம் முதல் பிரும்மவித்தை ஈறாக உள்ள சாத்திரங்கள்  நட்சத்திர மண்டலம்  சொர்க்க  நரகம்  பதினான்கு உலகங்கள்  அங்கே வாழ்பவரின் சரிதம்  ஆலய அமைப்பு  தேவதைகளைப் பிரதிஷ்டை செய்தல்  விருத்தங்கள்  துதிகள்  சிற்பம்  கோபுரம்  பிராணங்களின் உடலமைப்பு  நாடிகளின் எண்ணிக்கை  மூச்சு  உடல்  எலும்பு  உரோமம் இவற்றின் எண்ணிக்கை  பிறத்தல்  இறத்தல் பின் ஜீவன் செல்லுமிடங்கள்  மேகம்  மழை  சூரிய  சந்திர கிரணம்  கால அளவு  சங்கீதம்  நடனம்  காவிய நாடக அமைப்பு  கீதைகள்  சகுனம்  கனவு  நோய்  அதை அகற்றும் வழி  விலங்கு  செடிகொடிகளுக்குச் சிகிச்சை  பாம்பு எத்தனை முட்டையிடும்  கூடுவிட்டுக் கூடுபாயும் வகைகள்  நீதி  விமானம்  ரதம்  வெற்றிபெறவழி  சூன்யம்வைப்பது  எடுப்பது  பசியின்றி இருக்க மருந்து  எங்கு வசிக்க வேண்டும்  யாருடன் பழக வேண்டும்? குருபரம்பரை  சீடர்கடமை  பெண்கள் கடைநிதிகளைக் காணும் வகை  ஞானம்  பக்தி  கருமம்  வேதாந்தம்  இன்னும் பல எண்ணற்ற விஷயங்கள் புராணத்தில் உள்ளன.

இந்தியாவில் புராணங்கள்

                இந்திய அளவில் புராணங்கள் உயரிய நீதிகளைப் புகட்டும் வடமொழி புராணங்கள் மக்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின என்றே கூறலாம். வடமொழியில் வேதங்களுக்கு அடுத்தபடியாக புராணங்கள் திகழ்கின்றன. புராணங்களுக்கு ஐந்து இலக்கணத்தைக் குறிப்பிடுவர். அவை சர்க்கம்(சிருட்டி) பிரதிசர்க்கம் (அழிந்து மறுபடி உண்டாக்குவது) வம்சம் (தெய்வ பரம்பரை) மன்வந்தரம் (மனுவின் காலம்) வம்சியானது சரிதம் (அரச வம்சங்களின் வரலாறு) முதலியன4.

வடமொழிப் புராணங்களை மகாபுராணங்கள் (18) உபபுராணங்கள் (18) ஆதி புராணங்கள் (18) என்று மூன்று வகையாகப் பிரிப்பர் என சு.சக்திவேல் கூறுகிறார்.

வடமொழியில் பரம்பரையாகக் கூறப்பட்டுவந்த புராணங்கள் பதினெட்டு என்பர். அவை பிரம்ம புராணம்  பதும புராணம்  விஷ்ணு புராணம்  வாயுபுராணம்  பாகவத புராணம்  நாரதீயம்  பவிஷ்யம் புராணம்  பிரம்மவைர்த்தம் புராணம்  வாமன புராணம்  கூர்ம புராணம்  மத்ஸ்ய புராணம்  மச்ச புராணம்  கருட புராணம் போன்ற புராணங்கள் வடமொழியில் பரம்பரையாகக் கூறப்பட்டுவந்த புராணங்கள் எனக் கூறுகின்றனர்5.

தமிழ்ப் புராணங்கள்

தமிழில் புராணங்கள் பக்திச் சுவையும்  இலக்கியச் சுவையும்  கலைச்சுவையும் படிப்போருக்கும்  கேட்போருக்கும் உள்ளத்தை அள்ளும் செந்தமிழ் அமுதமாக திகழ்கின்றன. புராணக் காதல் தமிழருக்கு நிறைந்திருந்தமையால் இன்தமிழில் நூற்றுக்கும் மேலான புராணங்கள் தோன்றின.

தமிழில் முதலில்புராணம்என்ற பெயரில் வந்த நூல் பெரியபுராணம் ஆகும். இந்நூலை இயற்றியவர் சேக்கிழார். இந்நூல் 63 நாயன்மார்கள் வரலாற்றையும்  ஒன்பது தொகையடியார்களையும் குறிப்பிடுகின்றன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை  சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்ற நூலை இயற்றினார். இந்நூலில்பக்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவஎன்று சேக்கிழாரின் பக்திச் சுவையை மனம் திறந்து பாராட்டுகின்றார்.6 பெரியபுராணத்திற்கு பின்னர் பல புராணங்கள்; தல புராணங்களாகவும்  மொழிபெயர்ப்புகளாகவும் தழுவல்களாகவும் அமைந்துள்ளன.

திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர் இயற்றியது  சிவனின் 64 திருவிளையாடல்களைச் சிறப்பித்து கூறுகிறது. பெருங்காப்பியப் பண்பு மிக்கது. அன்பின் உருக்கமும் ஒன்பான் சுவையும் அழகு நடையும் உடையது.

சிவஞான முனிவர் அறுபத்துமூவர்; பற்றிய திருத்தொண்டர் புராணத்தையும்  அறுபத்துநான்கு திருவிளையாடல் பற்றிய திருவிளையாடற் புராணத்தையும் தம் படுக்கையின் இருபக்கங்களிலும் எப்போதும் வைத்துக்கொண்டே இருப்பாராம்.7

கந்தபுராணம்

இயற்றியவர் கச்சியப்ப சிவாசாரியார். முருகனின் பெருமைகளையும்  திருக்கோலச் சிறப்பினையும் கந்தபுராணம் கூறுகிறது.

காஞ்சி புராணம்

சிவஞான முனிவரால் இயற்றப்பட்டது. காஞ்சியின் சிறப்பைக் கூறுகிறது.

அருணாசல புராணம்

இயற்றியவர்சைவ எல்லப்ப நாவலர்.’திருவண்ணாமலை பற்றியது கார்த்திகை தீபத்தின் சிறப்பு  திருவண்ணாமலையை வலம் வருதலின் பயன் பேசப்படுகின்றது.சீகாளத்தி புராணம்  அரிச்சந்திர புராணம்  குற்றலாத் தலபுராணம்  சேதுபுராணம் போன்ற புராணங்கள் தமிழில் தொண்மையான புராணங்களாக குறிப்பிடலாம்.

உமாபதிசிவம் எழுதியுள்ள சேக்கிழார் புராணம்  அசலாம்பிகை அம்மையார் எழுதிய காந்திபுராணம் தனிமனிதர்களின் புராணங்களாகும்.

தமிழில் புராணங்கள் பெரும்பகுதி தலபுராணங்களாக அமைந்துள்ளன. தல புராணங்கள் தலத்தின் சிறப்பு  அங்கு வணங்கப்படும் இறைவனின் அருள் தன்மை முதலியவற்றையே குறிக்கோளாகக் கொண்டு பாடப் பெறுகின்றன.8

தமிழகத்தில் புராணியத் தாக்கம்

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்குடிஎன்று புறப்பொருள் வெண்பாமாலை சுட்டுவதை போலவே தமிழகத்தில் புராணத் தாக்கமானது சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே பொன் போல் பொதிந்து காணப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் காணப்படும் புராணத் தாக்கமானது பிற்கால புராணங்கள் எழ வழிகாட்டியாக அமைகின்றன என்றே கூறலாம்.

இறைவனை வழிபடும் முறை  வழிபடும்தெய்வங்கள்  இறைவனுக்குப் படைக்கப் பெறும் மலர்கள் முதலியவை பேசப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் காணப்படும் இறைச் செய்திகள் தமிழகத்தில் புராணத் தாக்கத்தின் பிழிவாக காணப்படுகின்றன. பத்துப்பாட்டுள் ஒன்றானதிருமுருகாற்றுப்படைமுருக வழிபாட்டை வெளிப்படையாகக் கூறுகின்றன. முருகன் திராவிடத் தெய்வம்  தமிழ் கடவுள் என்று போற்றப்படுபவன். முருகன் போரில் வல்லவன் என்பது பல இடங்களில் குறிக்கப்படுகின்றன. “வெல்போர்க் கொற்றவைச் சிறுவஎன்று நக்கீரர் பாடியுள்ளார்.

சங்க இலக்கியங்களில் காணப்படும் முருக வழிபாடு  பின்னாளில் கந்த புராணம் தோன்ற வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. திருமுருகாற்றுப் படையில் வரும் முருகன் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதை ஒரு பாடலடிகளால் வர்ணிக்கப்படுகின்றான். அந்த பாடலடிகள் இதோ

அருவர்ப் பயந்த ஆறமர் செல்வ!

ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை

மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிருவ!(..)

 

பெரும்பாணாற்றுப்படை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இறைவனைப் பற்றிக் கூறுகின்றன. அவற்றைச் சமயக்கருத்தின் புராணத்தாக்கமாகவும் பக்திக் கொள்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.பெரும்பாணாற்றுப்படையில்தொண்டைமான் இளந்திரையன் திருமாலின் அவதாரமாகக்கூறப்பெறுகிறான்.(பெரும்பாணா – 29)“திருவுடை மன்னரைக்கானில் திருமாலைக் கண்டேனேஎன்று பிற்காலத்தில் ஆழ்வார்கள் பாடுவதற்கு அடிகோலியது எனலாம்.

சிலப்பதிகாரத்தில் புராணத் தாக்கம்

                சிலப்பதிகாரத்தில் புராணத்தாக்கம் மிகுந்து காணப்படுகின்றன. சிலம்பில் திருமாலைக் குறித்த புராணச் செய்திகள் ஆய்ச்சியர் குரவையில் அதிகம் பேசப்படுகின்றன.

சிலம்பில் திருமால்  சிவன்  முருகன்  பலராமன்  கொற்றவை பற்றிய புராணச் செய்திகளை பார்க்கலாம்.

திருமாலைக் குறித்து வரும் புராணங்கள்

கடைகயிற்றால் கட்டுண்ட கதை

கண்ணன் அவதாரம் ஆய்ச்சியர் குரவையிலே இளங்கோவடிகள் அழகாக நம் மனக்கண் முன்னே நிறுத்துகின்றார். கண்ணன்  யசோதை சேர்த்து வைத்திருந்த தயிர்  மோர் முதலியவற்றைத் தரையில் கொட்டியும்  உரலைக் கீழே கவிழ்த்து அதன்மேல் ஏறிநின்று கொண்டு உறியில் இருந்த வெண்ணெய்  பால் முதலியவைகளை உண்டான். இதைக் கண்ட யசோதை கண்ணனை உரலோடு சேர்த்துக் கயிற்றால் கட்டுகிறாள். கட்டுக்குள் கண்ணன் அடங்கவில்லை. பல கயிற்றைக் கொண்டு கட்ட முடியாத நிலையில் கண்ணனே ஒரு சிறு கயிற்றினால் கட்டும்படி கூற யசோதை அவ்வாறே கட்ட கண்ணன் அக்கட்டுக்குள் அடங்கிவிட்டான். இதை இளங்கோவடிகள்10

அசோதையர் கடைகயிற்றால் கட்டுண்கை”(சிலம்பு 17:34)

என்று குறிப்பிடுகிறார்

கஞ்சன் வஞ்சம் கடந்த கதை

கம்சன் தேவகியின் சகோதரன். அவன் தேவகியை வசுதேவனுக்கு மணமுடித்து வைத்தான். மணமக்கள் ஊர்வலம் செல்லும் போது. “கம்சா உன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உனக்கு எமனாகப் போகிறது என்று வானில் ஓர்அசரீரீஉரைத்தது.” அதைக்கேட்ட கம்சன் தன் தங்கையையும் வசுதேவரையும் சிறையில் அடைத்து  அவர்களுக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றான். எட்டாவதாக பிறந்த குழந்தையே கண்ணன். இவன் ஆயர்பாடியில் யசோதை வீட்டில் யசோதைக்கு மகனாக வளர்ந்தான். இச்செய்தியை அறிந்த கம்சன் கண்ணனைக் கொல்லப் பல சூழ்ச்சிகள் செய்தான். கண்ணன் அனைத்தையும் முறியடித்தான்.  சிலம்பு இதனைக்கஞ்சனார் வஞ்சம் கடந்தானைஎன்று கூறுகிறது.

கன்றால் விளவெறிந்த கதை

கம்சனால் ஏவப்பட்டகபித்தாசூரன்என்பவன் ஓரிடத்தில் விளாமரமாக நின்றான். கண்ணன் தன்கீழே வரும் பொழுது மேலே விழுந்து கொல்ல வேண்டும் எனக் கருதினான். கம்சன் கண்ணனைக் கொல்லவத்தாசூரன்என்பவனையும் துனைக்கு அனுப்பி வைத்தான்11.

வத்தாசூரன் கன்றுவடிவம் எடுத்துக் கொண்டு கண்ணனைக் முட்டி கொல்ல வந்தான். கண்ணன் அந்த அசுரக் கன்றின் பன்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின் மேல் எறிந்தான். இருவரும் சிதைந்து அசுர வடிவுடன் கீழே விழுந்து மாண்டார்கள்.

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்”(சிலம்பு 17:19)

என்ற வரிகள் இக்கதையை உணர்த்துகின்றன.

பாண்டவர்க்குத் தூது நடந்த கதை

                பாரதப் போரிற்கு முன்னர் ஒருநாள் கிருஷ்ணனுக்கும் சகாதேவனுக்கும் வாக்கு வாதம்  நடந்தது. அப்போது ஒவ்வொருவரையும் பாரதப்போர் நிறுத்தவழியாது எனக் கிருஷ்ணன் கேட்க  தருமன்  பீமன்  அருச்சுனன்  நகுலன் முதலியோர் தம் கருத்தைக் கூறினர். பின்னர் சகாதேவன் திரௌவுபதியின் கூந்தலையும்  கிருஷ்ணனையும் கொன்றுவிட்டால் பாரதப்போர் ஏற்படாது என்று கூற கிருஷ்ணனுக்கும் சகாதேவனுக்கும் வாக்குவாதம் முற்றி சகாதேவன் வெற்றி பெறுகிறான். இச்சபதத்தின் விளைவால் கண்ணன் பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது செல்கிறான். இந்தக் கதையை இளங்கோவடிகள்

நடந்தவடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தவடி

 பாண்டவர்க்குத் தூதாக நடந்தானை”12

என்று கூறுகிறார்(சிலம்பு 17 : 36  37).

கண்ணன் அல்லிய வாடல்

கண்ணனையும் அவனுடைய அண்ணன் பலராமனையும் கொல்ல கம்சன் எண்ணினான். வில்விழா ஒன்றை நடத்தினான். அதில் இருவரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தான். கண்ணனும் பலராமனும் அவ்விழாவில் கலந்துகொள்ள மதுரை அரண்மனைக்குள் நுழைந்தார்கள் அரண்மனை வாசலில் இவர்களைக் கொல்வற்காகத் கம்சன்குவலாய பீடம்என்ற மதயானையை நிறுத்தியிருந்தான். யானை இவர்களைக் கண்டதும் சினம் கொண்டு பொங்கி வந்தன.

                இருவரும் அல்லியத்தொகுதி என்ற ஆடல் ஆடி யானையை எதிர்த்தார்கள். அதன் தந்தங்கள் இரண்டையும் மிக எளிதாகப் பறித்தார்கள். அவற்றையே படைக்கலங்களாக கொண்டு அந்த யானையை அடித்துக் கொன்றுவிட்டு உள்ளே சென்றார்கள் இளங்கோவடிகள் இதனை

கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக

அஞ்சன வண்ணன் ஆடிய கடலுள்

அல்லியத் தொகுதியும்”13         (சிலம்பு 6 : 46  48)

என்று கடலாடு காதையில் கூறுகிறார்.

கதிரவனை ஆழியால் மறைத்த கதை

                பாரதப்போர் நடைபெற்ற காலத்தில் அருச்சினனுடைய மகன் அபிமன்யூவைக் சயந்திரன் கொன்றுவிட்டான். இதனால் அருச்சுனன் புத்திர சோகத்தில் வருந்தி  பொழுது போவதற்குள் சயந்திரனைக் கொல்வேன்  கொன்று தீர்க்கா விட்டால் தீயில் விழுந்து மாண்டு போவதாகச் சபதம் செய்தான். இதனைக் கேட்ட துரியோதனன் முதலியோர் எப்படியாவது சயந்திரனைக் காப்பாற்றி விட்டால் அருச்சுனன் தீயில் விழுந்து மாண்டு போவான். அதன்பிறகு வெற்றி நமதே என முடிவு செய்து சயந்திரனை நடுவிழ் வைத்து மற்றவர்கள் சூழவிருந்தனர்.

பொழுது அமரருகின்ற தருவாயிலும் சயந்திரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு இருந்தால் அருச்சுணன் இறந்துவிடுவான் என்று எண்ணிக் கண்ணன் அவனைக் காப்பாற்ற தனது ஆழிப்படையைச் செலுத்திக் கதிரவனை மறைத்து விட்டான். கதிரவன் மறையவே பொழுது போய்விட்ட துணிவால் சயந்திரன் அர்ச்சுனன் தீப்பாய்வதைக் காண வெளியே வந்தான். கண்ணபிரான் அருச்சுணணுக்கு அவனைக் காட்டி கொல்லச் செய்தான். அவனும் கொன்று வீழ்த்தினான். பின்னர் கண்ணபிரான் ஆழியைப் பெற்றுக் கொண்டான். அப்போது கதிரவன் மறையாமலே இருந்தான்.14

 

இக்கதையை சிலம்பில்

கதிரி திகிரி யான் மறைத்த கடல் வண்ணன்”(சிலம்பு 17 : 26)

என்ற பாடலடிகள் மூலம் உணர்த்துகிறார்.

உலகுண்ட கதை

உலகுண்ட பெருவாயா எனத் திருமாலை வைணவர் அழைப்பது மரபு. உலக முடிவின் போது திருமால் பசி ஒன்றும் இல்லாமலே இவ்வுலகத்தையும் உண்டான் என்று புராணங்கள் கூறுகின்றன. இச்செய்தியை இளங்கோவடிகள்.

அறுபொருள் இவனென்றே அமரர்களைத் தொழுதேத்த

உறுபசியொன்றின்றியே உலகடைய உண்டனை”15(சிலம்பு 19:33  34)

என்ற பாடலடிகளால் இளங்கோவடிகள் உணர்த்துகிறார்.

ஈரடியால் மூவுலகை அளந்த கதை

திருமால் அவதாரங்களில் வாமன அவதாரம் ஒன்று ஆகும். திருமால் வாமனர் என்னும் பெயர் பெற்றுக் காசிபருடைய மகனாக இவ்வுலகில் தோன்றினார்.

                இவர் மிகக்குறுகிய வடிவம் உடையவர். இவருக்குக்குறளன்என்றொரு பெயரும் உண்டு. அந்நாளில் மாவலி என்பவன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தான். அவனால் தேவர்கட்கும் மனிதர்கட்கும் துன்பங்கள் பல உண்டாயின. இவ்வாமனருடைய பெருமையை உணர்ந்தோர் இவர்பால் சென்று மாவலி செய்யும் கொடுமையிலிருந்து தம்மைக் காக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர் வாமனர் மாவலிபாற்சென்று  நான் யாகம் செய்யமூன்றடி மண் வேண்டும்எனக் கேட்டார். அதைக் கேட்ட வாமனர் மூன்றடி மண்தானே பெற்றுக் கொள் என்று தாரை வார்த்துக் கொடுக்க வாமனர் ஓரடியில் மன்னையும் இன்னொரு அடியால் விண்னையும் அளந்தார். மூன்றாவது அடி எங்கே வைப்பது என்று கேட்க மாவலி தன் தலையைக் காட்டினான். அவன் தலையில் அடியை வைத்து அழுத்தினார்.16 இக்கதைக் குறிப்பு ஒன்றை இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில்

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசேவடி சேப்ப”(சிலம்பு : 17:35)

என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

 

 

இராமன் இலங்கையை அழித்த கதை

இராமன் தசரதனுக்கு மூத்த மகனாகப் பிறந்து வளர்ந்தான். ஆசிசேடன் சுமித்திரையின் மகனாகத் தோன்றி இலக்குமணன் என்ற பெயரோடு விளங்கினான். இராமனுக்குச் சீதையைத் திருமணம் செய்தனர். தசரதன் முதுமையடையவே தன்மகன் இராமனுக்கு முடிசூட்ட எண்ணினான். கைகேயின் சூழ்ச்சியால் இராமன் காட்டிற்குச் செல்ல நேரிட்டது. இராமன் சீதையொடும் இலக்குமணனுடன் காணகம் சென்ற குறிப்பு சிலம்பில்            

தாதை ஏவலின் மாதுடன் போகித்

காதலி நீங்கக் கடுந்துயருழந்தோன்

வேத முதல்வ”(சிலம்பு : 17 : 45  47)

என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இராவனன் சீதையைச் சிறையெடுத்தான். பின்னர் இராமன் இலக்குமணன் இருவரும் இலங்கை சென்று அங்குள்ளசோஎன்ற அரனை வீழ்த்தி அங்கிருந்த அரக்கர்களைக் கொன்றனர் என்பதை -

தம்பியொடுங் கான் போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த”17(சிலம்பு : 17-35 36)

என்ற புராணச் செய்தி சிலம்பிலே பதிவு செய்யப்படிருக்கின்றன.

சிவன் பற்றிய புராணக் கதைகள்

மேருமலையை வில்லாக வளைத்தவன். சிவ பெருமான் முப்புரம் எரிக்கச் சென்றபோது மேருமலையை வில்லாகவும்  பாம்பை

அதன் நாணாகவும் பூட்டி எடுத்துச் சென்றான். இதை

அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோன்”(சிலம்பு : 12 : 58)

என்ற அடியால் அறியமுடிகிறது.

நஞ்சுண்ட கதை

                ஒரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் சாவையெண்ணி அஞ்சினார்கள். நான்முகனிடம் சென்று சாவாமலிருக்க வழியாது? என்று கேட்டார்கள் நான்முகன் தேவர்களை அழைத்துக் கொண்டு திருமாலிடஞ் சென்றான். சாவாமல் இருப்பதற்கு வழியாது? என்று வினவினார்கள். பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து உண்போமானால் சாவாமல் இருக்கலாம் என்று கூறினார்.18

                திருமால் தேவர்களோடு சென்று திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். அமுதம் எழும்வரை கடையவில்லை. இளைத்து வருந்தி நின்றார்கள். அப்போது வாலி அங்கு வந்தான். மந்தார மலையை மலையை இழுத்து கடையத் தொடங்கினான். மந்தாரமலை கடலுள் ஆழ்ந்தது. திருமால் ஆமையாக மலையைத் தாங்கினார். மேலும் கடைந்த போது மத்தாக மலையை பற்றியிருந்த பாம்பு வலி பொறுக்காமல் நஞ்சைக் கக்கியது. அந்நஞ்சு எல்லா உயிர்களையும் வருத்திக் கறுப்பாக்கியது அதனால் திருமாலும் கறுத்துப் போனான். தேவர்கள் எல்லாரும் கயிலைக்கு ஓடி இறைவனிடம் முறையிட்டார்கள். இறைவன் அந்நஞ்சினைப் பருகத் தொடங்கினார். அப்போது உமாதேவி அந்நஞ்சு உள்ளே செல்லாமல் கண்டத்தைப் பிடித்துக் கொண்டாள். நஞ்சு கண்டத்திலேயே நின்றது.19 அதனால் கண்டம் கறுப்பாகியது. இதனை இளங்கோவடிகள்.

நஞ்சுண்டு கறுத்த கண்டி”(சிலம்பு 12:57)

என்றும்

விண்ணோர் அமுதுண்டுஞ்; சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்”(சிலம்பு : 12:22 23)

என்ற பாடலடிகள் மூலமும் சிவன் பற்றிய புராணக் குறிப்பு அறியமுடிகிறது.

கொற்றவை பற்றிய புராணக் கதை

தாருகனைக் கொன்ற கதை

தாருகா சூரனால் துன்பமடைந்த தேவர்கள் பெண்கள் உருக் கொண்டு சிவனை சந்தித்து தமது குறையைக் கூறினர். பெண்ணாலன்றி வேறு எவராலும் இறவாத தாருகனைக் கொல்லுமாறு சிவன் சக்திக்குக் கட்டளையிட்டார். தேவியின் ஒருகலை சிவனின் விஷக்கறை படிந்து வந்ததால் காளி எனப் பெயரடைந்தது. இவ்வகை பிறந்த காளி தாருகனை நீறாக்கினாள்20. இது சிலம்பில்

கானமுகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணுமல்லள்”(சிலம்பு : 20:35 36)

முருகன் பற்றிய புராணக் கதைகள்

சூரபதுமன் கதை

                சூரபதுமன் ஒர் அரக்கன். இவர் போரில் இறந்து விட்ட அசுரரையெல்லாம் எழுப்பி முருகனுடன் போர்புரியத் தொடங்கினான். முருகப்பெருமான் இந்திரனை நினைத்து வணங்கினான். அது மயிலாக வந்தது. அதன் மீதமர்ந்து அசுரர்களை வென்றான். பின்னர் பூமி  நீர்  நெருப்பு  காற்று முதலிய உருக்கொண்டு போர் புரிய முருகன் அவற்றுக்கு மாறான பொருளாக இருந்து அவற்றை அடக்கினான். அடுத்து சூரன் கடல்நடுவே மலைவடிவாய் நின்றான். முருகன் அம்மலையை இருபிரிவாக பிளந்தான். இரு பிரிவான சூரன் முருகனுக்கு வேலும்  மயிலுமாக மாறினான். இக்குறிப்பு சிலம்பில்

கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்து”21

என்ற வரி சிலம்பிலே காணப்படுகின்றன.

தாரகா சூரன் கதை

சூரபதுமனின் தமையன். தேவர் வேண்டுகோளின்படி முருகன் சிவனின் கட்டளையேற்று அசுரருடன் யுத்தத்திற்கு யத்தனம் செய்து வீரவாகுத் தேவரை ஏவ  அவரால் முடியாமல் போக  முருகன் தாரகாசூரனை வேலாயுத்தாற் கொலை புரிந்து மாயம் செய்த மலையுருக் கொண்ட கிரௌஞ்சனைப் பிளந்து நவ வீரரை மூர்ச்சை தெளிவித்து எழுப்பினார். இப்புராணக் குறிப்பு சிலம்பில்

“…………………. பண்டொருநாட்

சூர்மா தடிந்த சூடரிலைய வெள்வேலே

(சிலம்பு :24:8 9)

வருதிகிரி கோல் அவுணன் மார்பம் பினந்து

குருகுபெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே”22(சிலம்பு :24:10 11)

 

 

சரவணப் பூம்பள்ளியில் முருகனிருந்த கதை

                சிவன் தோத்திரத்தில் இருந்தபோது தேவர் வேண்டுகோளினால்  சிவனின் நெற்றியிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அவற்றை அக்னி சிவனின் கட்டளையால் கங்கையில் விட்டான். கங்கை வெப்பம் தாங்காது சரவண பொய்கையில் மலர்ந்த தாமரை மலரில் வைத்தாள் அங்கிருந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு திருக்கார்த்திகை பெண்களால் எடுத்து பாலூட்டி வளர்த்தனர். உமாதேவியார் எடுக்க ஆறு திருமுருகங்களும் பன்னிருகைகளும் கொண்டு விளங்கினான் முருகன். இக்கதையை சிலம்பில்

அணிமுகங்க கோராறு மீராறு கையு

மிணையின்றித் தாவேந்திய”23(சிலம்பு :24:9 10)

சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்

திருமுலைப்பால் உண்டான் திருக்கை வேலன்றே”(சிலம்பு 24:10)

என்ற வரிகளில் முருகனின் புராணத்தை அறியமுடிகிறது.

காமன் எரிந்த கதை

காமன் இரதியைத் திருமணம் செய்து கொண்ட போது  பிரமன் முதலான தேவர்கள் காமனிடம் சென்று  இவ்வுலக உயிர்கள் வெப்பம் தாளாமல் வருந்துகின்றன. இதற்குக் காரணம் சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதுதான். சிவனின் நிஷ்டையைக் கலைக்க வேண்டுமென மன்றாடினார்கள். காமன் அதற்கு ஒப்புக்கொண்டு சிவன் மீது மலரம்புகளை எய்தான். இதனால் தவங்கலைந்த சிவன் நெற்றிக்கண்ணால் நோக்கினார். காமன் சாம்பலானான். சிலம்பில் இக்கதைக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டுஉருவிலாளன்என்று குறிக்கப் பெற்றுள்ளது.

சிலம்பில் புராண பாத்திரங்கள்

சிவன்

                சைவசமயத்தின் தலைமைக் கடவுளாக திகழ்பவன் சிவன். சிவனுக்குக்கூற்றுவன்என்ற பெயரும் வழங்கப்பெறுகிறது. சிவனது உருவமும்  சிவனின் சிறப்புகளும் சங்க இலக்கியத்தில் மிக அழகாக கூறப்பட்டுள்ளன. சிவனின் கழுத்து கருமையாக  இருக்கும். அதனால் சிவனைக்கண்டம் கருத்தவன்என்பர்.

புறநானூற்றில்நீலமணிமிடற்றோன்”24 என்று குறிக்கப்பட்டுள்ளன.

சிவன் ஒளிபொருந்திய தாழ்ந்த சடையை உடையவன் பிறைச்சந்திரனைத் தலையில் சூடியவன்  முக்கண்னை உடைய முதல்வன். இதனைக் கலித்தொகை

மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறை நுதல்

முக்கண்ணானுருவே போல்”25

எனக் கலித்தொகை கூறுகின்றது (கலித் - 104)

சிவன் எருதை வாகனமாக பெற்றவன். அவ்எருதையே தீட்டிய சித்திரத்தைக் கொடியாகக் கொண்டு விளங்குகிறான். இது கலித்தொகையில்ஆனேற்றுக் கொடியோன்”26 என்று கூறுகிறது. சிவபெருமான் மார்பில் முப்புரி-நூலை அணிந்தவன். நெற்றிக் கண்ணை உடையவன். சூலப்படை ஏந்தியவன். சிவனின் மனைவி உமையவள். இவள் செந்நிறம் கொண்டவள். இதனாலேயே சிவன் என அழைக்கப் பெறுகிறான். தாருகா முனிவர் அனுப்பிய புலியின் தோலை ஆடையாக உடையவன். கல்லால மரநிழலின் கீழ் தட்சினாமூர்த்தியாயிருந்து முனிவர் நால்வருக்கு மறை ஆகமங்களை உபதேசித்தவன். இதனைக் குறித்து  நற்றிணையில்

“……… கடவுளாலத்து”27 என்று நற்றிணையிலும்

ஆலமர் கடவுளன்ன நின்றுகடவுளாலத்து”28

என்று புறநானூற்றிலும் கூறப்பெற்றுள்ளன.

திரிபுரங்களைத் தீயால் அழித்தவன். கபாலம் ஏந்திய கையை உடையவன். சிலம்பில் சிவன் திரிபுரங்களை எறித்ததை

திரிபுர மெரியத் தேவர் வேண்ட

எரிமுகப் பேரம் பேவல் கேட்ப

உமையவளொரு திறனாக வோங்கிய”(சிலம்பு : 6:40-42)

என்று சிலம்பு கூறுகின்றன.சிவன் நஞ்சை உண்டு கண்டங் கறுத்தவன் என்பதை சிலம்பிலே

விண்ணோ ரமுதுண்டுஞ் சாவா ரொருவரும்

உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்”(சிலம்பு :12:22 23)

வேட்டுவவரி அடிகள் உரைக்கின்றன. சிவனின் ஊர்தி எருது ஆகும். வரந்தருகாதையில்ஆனேறுர்ந்தோன்என்று குறிக்கப் பெற்றுள்ளது.

திருமால்

                திருமால் மும்மூர்திகளில் ஒருவர். இவர் காக்கும் கடவுள். இவரை விஷ்ணு எனவும் கூறுவர். இவர் நான்கு கைகளையுடையவர் சங்கு  சக்கரம்  உடைவாள்  கதை  வில் ஆகியவற்றைத் தாங்கியிருப்பவர். சங்கின் பெயர்பாஞ்ச சன்யம் உடைவாளின் பெயர்நந்தகம்கதாயுதத்தின் பெயர்கௌமேதகம்வில்லின் பெயர்சார்ரங்கம்’. இவர் மார்பில்மருஒன்று உண்டு. அதன் பெயர்ஸ்ரீவாத்ஸயம்கழுத்தில் கௌத்துவம் என்ற மணியை ஆதாரமாக கொண்டு விளங்குகிறார்.

                திருமால் நீலநிறம் கொண்டு விளங்குகிறான். புறநானூற்றில் இது விளக்கப் பெற்றுள்ளது.

நீனிற வுருவினேமி யொனுமென்”29(புறம்.58)

                                                மண்ணுறு திருமேனி புரையுமேனி”30(புறம்.56)

திருமால் பறவைக் கொடியை உடையவன். பரிபாடலில்புள்ளுப்பொறி புனைகொடி”31 என்று கூறப்பெற்றுள்ளது. ஆயிரம் படங்களை விரித்த ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு விளங்குகிறான். தாமரைக்கண்ணன்  மலர்போன்ற உடலினை உடையவன். திருமகள் வீற்றிருக்கும் மார்பனன் அம்மார்பில் சிறந்த அணிகலன்கள் இருக்கின்றன. நெருப்புப் போன்று மிளிரும் ஆடையை உடுத்தியவன்.

ஆயிரம் விரிந்த அணங்குடை அருந்தலை

தீயுமிழ் திறனொடு முடிமிசை அணவர

மாயுடை மலர்  மார்பின் மையில்வாள் வளைமேனிச்

சேயுயர் பணைமிசை எழில்வேழம் ஏந்திய

வாய்வாங்கும் வளை நாஞ்சில் ஒருகுழை யொருவனை

எரிமலர் சினைஇய கண்ணை பூவை

திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை மால் வரை

எதிதிரிந் தன்ன பொன்புனை உடுக்கையை

சேவலங் கொடியோய்”32……….. (பரி 15)

 

என வரும் பரிபாடல் அடிகள் உணர்த்துகின்றன.

முன்பொரு காலத்தில் மழை அதிகரித்த காரணத்தால் வெள்ளம் அதிகரித்தது. இதனை அறிந்த திருமால் அன்னச்சேவலாய் வடிவெடுத்து அவ்வெள்ளத்தை அதன் சிறகினால் தாங்கித் தடுத்தார் என்ற புராணச் செய்தி பரிபாடலில் கூறப்பெற்றுள்ளது.

கலித்தொகை நூற்றி மூன்றாம் பாடலில் கண்ணனைக் கொல்வதற்காகக் கம்சனால் ஏவப்பட்ட குதிரைக் கண்ணன் வாய்பிளந்து கொன்றான் என்ற கதைக்குறிப்பு வருகின்றது.

மேவார் விடுதந்த உந்தற் குதிரையை

வாய்பகுத் திட்டுப் புடைத்த ஞான்றின்னன் கொல்

மாயோனென்றுட்கிற்றென் நெஞ்சு.”33(கலி- 103)

சிலம்பில் கண்ணனைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய வத்தாசூரன்  கபித்தாசூரன் என்ற அரக்கர்களைக் கொன்றான் என்று கூறுகிறது. மேலும் பாண்டவர்க்குத் தூதாக சென்றதையும்  பாரதயுத்தத்தில் கதிரவனை ஆழியால் மறைத்ததையும்  திருப்பாற்கடலை கடைந்த பொழுது ஆமையுரு தாங்கி  மலையை நிற்க செய்ததையும்  ராமன் இலக்குவனுடன் போர்புரிந்து இலங்கையை அழித்த கதையும்  வாமன அவதாரம் எடுத்து ஈரடியில் உலகை அளந்த கதையும் திருமால் பற்றி சிலம்பிலே அதிகம் பேசப்படுகின்றன.

முருகன்

                முருகன் என்றால்அழகுஎன்பது பொருள். தமிழ்க் கடவுள் என்று போற்றப்படுபவன். முருகன் சிவபெருமானுக்கு இளையமகன். அவனுடைய உருவ அழகைக் குறுந்தொகைப் பாடல்தாமரை புரையும் காமர் சேவடி”34என்று கூறுகிறது. அழகிய திருவடிகளையும்  செக்கச் சிவந்த ஆடையினையும்  குன்றினைப் போன்ற பிளந்த வேலினையும் உடையவன். முருகனுக்குச்சேல்என்ற பெயரும் உண்டு. தொல்காப்பியர் முருகனைக்சேயோன் மேய மைவரை உலகம்என்று குறிஞ்சி நிலத் தலைவனாகக் கூறுகின்றார். முருகன் அவுணரைக் கொன்ற காரணத்தால்நெடுவேள்என்ற பெயர் வழங்கப் பெறுகிறது. சிலம்பு முருகனை

வருதிகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து

குருகுபெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே         (சிலம்பு 24:10)

என்று குன்றக்குரவையிலே பேசப்படுகின்றன. ஐங்குறுநூற்றில் முருகனை குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. ‘வெற்றிப்பத்து முழுவதும் வேலனை வணங்கி வெறியாடல் நிகழ்த்துவதைக் குறிக்கின்றது.

முருகு என மொழியுமாயின்

அருவரை நாடன் பெயர்கொலோ அதுவே                (குறுந் - 248)

என்பதில் தலைமகன் பெயர் முருகன் என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ‘மலையுறை கடவுள் குலமுதல்என்பது முருகன் குறவர்களின் குலதெய்வம் எனக் குறிக்கிறது.

முருகன் மயிலைக் கொடியாகக் கொண்டுள்ளான். கடம்ப மாலையை அணிந்தவன் இதனை அகநானூறு

கொடிநுடங்கு மறுகில் கடல் குடாஅது

பல்பொறி மஞ்ஞைவெல்கொடி உயிரிய”35(அகம்.149)

பத்துப்பாட்டுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை நூல் முழுவதும் முருகனைப் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது. முருகன் ஆறு திருமுகங்களும் பன்னிரு கைகளும் உடையவன் என்பது பற்றிப் பேசப் பெறுகின்றது.

                முருகன் நினைத்ததை முடிக்கும் வல்லவன். முருகன் தீண்டி வருத்தும் இயல்பு கொண்டவன். எனவே வெறியாட்டு அயர்தல் வழக்கமாகச் சங்க இலக்கியத்தில் மேற்கொள்ளப் பெற்றது. நற்றிணையில்

கார்நறுங் கடம்பின் கண்ணிசூடி

வேலன் வேண்ட வெறிபனை வந்தோய்

கடவுளாயினும் ஆக”36(நற் - 34)

முருகன் சிவபெருமான் அருளால் கங்கையில் தோன்றியவன். கங்கை வெப்பம் தாங்காமல் ஆறு தீப்பொறிகளையும் சரவண பொய்கையில் வைத்தாள். ஆறு தீப்பொறிகளும் ஆறுகுழந்தைகளாக மாற கார்த்திகை பெண்கள் ஆறுவர் பாலூட்டி வளர்க்க. உமாதேவியார் குழந்தையை எடுக்க ஆறுதிருமுகங்களும்  பண்ணிரண்டு திருக்கண்களும் உடையவனாக தோன்றினான். சிலம்பு இதனை

அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும்

இணையின்றித் தானுடையான ஏந்திய வேலன்றே

பிணிமுக மேல் தொண்டவுணர் பீடழியும் விண்ணதல்

மணிவிசும்பில் கோனேத்த மாறட்ட வெள்வேலே”(சிலம்புவரி : 24:9-12)

என்று முருகனை பற்றிக் குன்றக் குரவையிலே பேசப்படுகின்றன.

                சிவனின் மகனாக முருகன் பொய்கையில் அவதரித்தல்  சூரபதுமன் அவன்தம்பி தாரகா சூரனை அழித்தல்  கிரௌவுஞ்ச மலையை பிளத்தல் போன்ற செய்திகள் சிலம்பிலே இடம்பெற்றுள்ளன.

பலராமன்

மாயோனின் அவதாரங்களில் கண்ணன் பிறப்பும் ஒன்றாகும். பலராமன் கண்ணனுக்குத் தமையன் ஆவான். ‘ஒரு குழையொருவன்என அழைக்கப் பெறும் பெருமையுடையவன். ஒரு காதில் மட்டும் குண்டலம் அணிந்தவன். பனைக்கொடியை உடையவன். நாஞ்சில் என்னும் கலப்பையைப் படைக்கருவியாகக் கையில் கொண்டு விளங்குகிறான்.

                வெண்சங்கினை ஒப்பநிறத்தையுடையவன். பலத்தில் சிறந்தவன். ‘நீல ஆடையை உடையவன்’. இதனைக் கலித்தொகைநீலநீருடை போலத் தகைபெற்ற வெண்திரைஎனக் கூறுகிறது.

                சிலம்பிலே கண்ணனின் தமையனாக பலராமன் பேசப்படுகிறான். கம்சன் கண்ணன்  பலராமன் இருவரையும் கொல்ல மதுரை மாநகரில் வில் விழா ஏற்பாடு செய்திருந்தான். அவ்வில்விழாவில் கலந்து கொள்ள வரும் பொழுதுகுவலாய பீடம்என்ற மதம் பிடித்த யானையை ஏவினான்.37. இருவரும் யானையை அடக்கி வெற்றி கொண்டனர். இச்செய்தி சிலம்பிலே காணப்படுகின்றன.

இந்திரன்

                ஆயிரம் கண்களை உடையவன். நூறு வேள்விகளைச் செய்து முடித்த தேவர்களுக்குத் தலைவன். நான்கு தந்தங்களையுடையஐராவதம்என்னும் யானையை உடையவன். இதனை திருமுருகாற்றுப்படை

நூற்றுப் பத்தடுக்கிய நாட்டத்து தூறுபல்

வேள்வி முற்றிய வென்றகு கொற்றத்து

ஈரிரண் டேந்திய மழுப்பி னெழிடைத்

தாழ்பெருந் தடங்கை யுயர்த்த யானை

எருத்த மேறிய திருக்கிளர் செல்வனும்”(திரு.பா.155 160)              

என்று கூறுகின்றன. வச்சிராயுதத்தை ஏந்திய கையை உடையவனாக திகழ்கிறான்.

ததீசி என்னும் பெயருடைய முனிவர். இவர் தந்தை பெயர்அதர்வா தாயின் பெயர் சாந்தினி ததீசி முனிவர் அருந்தவம் புரிந்து மேன்மையுடைய வராகத் திகழ்ந்தார்.

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்க்கடலை கடைந்தபோது தங்கள் படைக்கலங்களை வைத்திருக்குமாறு கூறி இவரிடந் தந்து சென்றனர். நெடுங்காலஞ் சென்றும் அவர்கள் திரும்பவந்து கேட்கவில்லை. முனிவர் தம்முடைய தவப்பெருமையினால் அப்படைக் கலங்களையெல்லாம் விழுங்கினார். அவைகளெல்லாம் ஒன்றாய்த் திரண்டு முதுகெலும்பாக அமைந்து நின்றன. இச்செய்தியை அறிந்த இந்திரன் அவர் முதுகெலும்பைப் பெற்றுப் படைக்கலஞ் செய்ய எண்ணினான். முனிவரிடம் வந்து தங்களுடைய முதுகெலும்பை எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினான்.38 இக்குறிப்பு சிலம்பில்

தேவர் கோமான் தெய்வக் காவற்

படைநினக் களிக்கவதனிடைநினக் கிடையென”(சிலம்பு:2:47-49)

என வருகிறது.

                சிலப்பதிகாரத்தில் இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா நடைபெறும். புகார் நகரில் கற்பக மரக்கோட்டம் இருந்தது. விழா நாளன்று தெருக்கள் அழகுறுத்தப்பட்டன. விளக்குகளும் தோரணங்களும் தெருக்களை அழகு செய்தன. வீதிகளிலும் மன்றங்களிலும் புதுமணல் பரப்பப்பட்டது. சிவன் கோயில் முதலாகப் பூதசதுக்கம் ஈறாகப் பூசைகள் நடந்தன. பசியும் பிணியும் பகையும் நீங்கி  வசியும் வளனும் சுரக்கவென வாழ்த்தி விழாவெடுத்தனர்.

                வெள்ளிடை மன்றம்  பாவைமன்றம்  இலஞ்சி மன்றம் முதலிய அனைத்து மன்றங்களிலும் பலி கொடுத்து வச்சிரக்கோட்டத்தின்கண் யானையின் பிடர்த் தலையின்கண் முரசேற்றி வெள்ளானைக் கோட்டத்தின்கண் விழாவின் தொடக்கமும் முடிவும் கூறி  கற்பகத்தருக் கோட்டத்தில் கொடியேற்றினர். ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கூடி இந்திரனைக் காவிரியில் நீராட்டினர்.39 இச்செய்தி சிலம்பில்

வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்

கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி

வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்து

கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி

தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்

புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி

மண்ணக மருள வானகம் வியப்ப

விண்ணவர் தலைவனை விழுநீராட்டிப்

என இந்திரனை குறித்து வருகின்றன (சிலம்புவரி : 5:141-165)

தொகுப்புரை

             சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய தமிழுக்கே உரிய முதல் காப்பியம். தண்டியலங்காரம் குறிப்பிடும் காப்பிய தகுதிகள் அனைத்தையும் பெற்றது சிலப்பதிகாரம்.

             தமிழகத்தில் நடந்த  தமிழில் தோன்றிய  தமிழ்ப் புலவோர் செய்த தனித்தமிழ்க் காப்பியங்களாக மிளிர்கின்றன சிலப்பதிகாரம்.

             சிலப்பதிகாரத்தில் ஏராளமான புராணச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. இவை உள்ளத்தை அள்ளும் இலக்கியச் சுவை பிலிற்றும் செந்தமிழ்க் கவியமுதாக திகழ்கிறது.

             சிலப்பதிகாரத்தில் ஏராளமான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

             சிலப்பதிகாரத்தில் அனைத்து சமயங்களையும் ஒருங்கே போற்றப்பட்டாலும் வைணவச் சார்புடைய புராணங்கள் மிகுதியாக பேசப்பட்டுள்ளன.

             ஆய்ச்சியர் குரவையிலே வைணவ சார்புடைய புராணங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ணன் பாண்டவர்க்காக தூது செல்லல்  கம்சன் கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பிய புராணச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

             திருமாலின் வாமன அவதாரம்  பாரதப்போரில் கிருஷ்ணன் கதிரவனை ஆழியால் மறைத்த கதை கிருஷ்ணன் உலகுண்ட கதை போன்ற புராணச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

             திருமாலின் மற்றொரு அவதாரமான ராமஅவதாரம். ராமன்  இலட்குமணனுடன் இலங்கை சென்று  இலங்கை அழித்து சீதையை மீட்டு சென்றதை ஆய்ச்சியர் குரவையிலே காண முடிகின்றது.

             சிவபெருமான் மேருமலையை வில்லாக வளைத்து பாம்பை நாணாக பூட்டி முப்புரத்தை எரித்த புராணச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

             திருப்பாற்கடலை கடைந்த பொழுது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்திய பொழுது உமாதேவி கண்டத்தில் தடுத்து நிறுத்தியதால் கண்டம் கறுப்பானது. இதனைச் சிலம்பு கண்டம் கறுத்தவன் எனக் கூறுகிறது.

             கொற்றவை தாருகனைக் கொன்ற புராணச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

             முருகன் சிவபெருமான் அருளால் சரவண பூம்பள்ளியல் தோன்றுதல்  ஆறு திருக்கார்த்திகை பெண்களால் எடுத்து வளர்க்கப்படுதல்  முருகன் சூரபதுமனை அழித்தல்  அவன் தமையன் கிரௌவுஞ்சனை அழித்தல் போன்ற செய்திகள் குன்றக் குரவையிலே இடம் பெற்றுள்ளன.

             சங்க இலக்கியத்தின் பிழிவாக  தமிழ் இலக்கியப் போக்கின் திருப்பு முனையாகச் சிலப்பதிகாரம் விளங்குகிறது. பக்தி இலக்கியங் கட்குக் குன்றக்குரவை  ஆய்ச்சியர் குரவை  வேட்டுவவரி ஆகியவை வழிகாட்டியாக இருந்திருக்கின்றன.



கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. இக்கட்டுரையில் குறிப்பிட்ட சார்ரங்கம் என்பது தவறு என்றும் சார்ங்கம் என்பதுதான் சரி என திரு குடவாயில் பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார்

    பதிலளிநீக்கு