Ticker

6/recent/ticker-posts

கண்ணகி சிறப்புநிலை

 

கண்ணகி சிறப்புநிலை

                பெண்ணைக் காப்பியத் தலைவியாக்கிப் பெருமைப்படுத்திய பெண்ணின் பெருமை மிகு காப்பியம் சிலப்பதிகாரம். கற்புக்கரசி கண்ணகி கற்புடைப்பெண் ஏற்றம்பெற்ற காப்பியத் தலைவியின் காப்பியமாக விளங்குவதால் பத்தினிக்காப்பியம் என்றும் கூறலாம்.

                பத்தினி என்ற சொல்லும் பத்தினிப் பெண்டிர் தம் வரலாறும் சிலம்பிலேயேதான் முதன் முதலில் காணப்படுகின்றன

                சங்க இலக்கியங்களில் பத்தினியை வடமீன் புரையும் கற்பினாள்  அருந்ததீ அனயை கற்பினாள்  முல்லை சான்ற கற்பினாள்  கடவுட் கற்பினாள் என்றெல்லாம் அழைக்கின்றன.

                சங்க இலக்கியங்களில் கற்பின் திண்மை போற்றப் பெற்றது எனினும் அக்கற்பின் வலியால் பெண்ணொருத்தி இறைமை பெற்றவரலாறு சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. ‘சிலம்பிலேதான் முதன்முதலில் கற்புடையப்பெண் கடவுளாக காட்சிபடுத்தப்படுகிறாள்’. சிலம்பிலே கண்ணகியின் கற்புக்கு அருந்ததீ நிகராக ஒப்பிடப்படுகிறாள்.

                சிலம்பு முதன்முதலில் பத்தினிப் பெண்டிர் வரலாற்றிற்கு இடமளித்து மதுரைக்காண்டத்தில் வஞ்சின மாலையில் பத்தினிப் பெண்டிர் எழுவர் தம் செய்திகளைத் தொகுத்துத் தருகின்றது.

                சிலம்புகூறும் மூப்பெரும் காண்டத்துள் தலைமை பெற்று நிற்பது  பத்தினியை ஏத்தும் பண்புசிலம்பில் மாநாய்கன் மகளாக அறிமுகம் பெற்ற கண்ணகி  பத்தினிப் பெண்டிர் பலர் வாழ்ந்த பதிப் பிறந்தவளாகப் பொலிகின்றாள்

                பத்தினிப் பெண்களின் பரம்பரை ஒன்றைத் தொகுக்கும் அடிகள்  கண்ணகியின் பத்தினிமைக்குத் தக்கதொரு பின்புலத்தை அமைத்து விடுகின்றார். வேறுபட்ட சூழல்களில் தம் கற்புத்திறம் விளங்க நின்ற பத்தினியரைக்காட்ட அவருள் காப்பியத் தலைவியின் இடத்தைப் பொலிவுறுத்தியுள்ளார் இளங்கோவடிகள்.

                சிலம்பிலே கண்ணகி புகார்நகரில் சாதாரண பெண்ணாக பிறந்து பாண்டியனிடம் வழக்குரைத்து இறுதியில் பத்தினி கடவுளாக மணிமுடி தரித்த மன்னர்களெல்லாம் கண்ணகியை வணங்குகின்றன. இவ்வழிபாடு தமிழகத்தில் காலப்போக்கில் மழை தரும் கடவுளாக மாரியம்மனாக வழிபடுகின்றனர். கண்ணகி வழிபாடு தமிழகம்  கேரளம்  இலங்க எகிப்து போன்ற நாடுகளில் அம்மனாக வழிபடுகின்றனர்.

வாழ்க்கைத் தோற்றம்

                புகார்நகரில் வணிகர் குலத்துள் பெருங்குடியர் மரபிலே தோன்றிய பேரீகையாளன் மாநாய்கன் மகள் கண்ணகி. அந்நகரில் மாசாத்துவான் என்னும் பெரும் வணிகனின் மகன் கோவலன்.

                கண்ணகி உருவால் திருவையும் கற்பால்

                அருந்ததீயையும் ஒத்து விளங்கினாள்”1

கண்ணகியை கற்புக்கரசி என்று சொல்லக்கூடிய அருந்ததீக்கு நிகரானவள் என இளங்கோவடிகள் கூறுகிறார்.

                போதிலார் திருவினாள் புகழுடை வடிவு என்றும்

                தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்

                மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

                காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென் பாள்”(சிலம்பு:1.25 29)

கோவலனுக்குப் பதினாறாண்டும் கண்ணகிக்குப் பன்னீராண்டும் இருக்கையில் குரவர் இருவரும் சில மகளிரை அழைத்து யானை மீதேற்றி தம்மக்கட்கு மணமென்று மாநகரார்க்கு அறிவித்தனர். மாங்கல்யத்தை ஊர்வலம் செய்வித்தனர்  வயிரமணித் தூண்கள் வரிசையாகப் பொருந்திய மண்டபத்தில் நீல விதானத்தின் கீழ் முத்துப்பந்தலில் உற்றார் உறவினர் நெருங்கியிருக்க பல வாத்தியங்கள் முழங்க மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட கோவலனும் கண்ணகியும் தீவலஞ் செய்தனர். அப்பொழுது அங்கிருந்த சுற்றத்தார்கள் மணமக்கள் இருவரையும் வாழ்த்தினர்.

                கண்ணகியின் கையைப் பிடித்துக் கொண்டு கோவலன் தீ வலம் வந்தான் என்று கூறும் இளங்கோவடிகள்அதனைக் காண்பார்கள் நோன்பு என்னோ என்று வியப்போடு பாடுகிறார்.

                கற்பை நெருப்போடு ஒப்பிடுவது உண்டு கற்பைக் கடைப்பிடித்து வாழும் பத்தினியரும் நெருப்புக்கு ஒப்பானவரே. அதனாற்றான்  கணணகியைக்கற்புக் கனலி”2 என்கின்றனர். அந்தக் கற்புக்கனலி அந்தனப் புரோகிதர் வளர்த்த சீறு தீயை வலம் வருகிறாள் என்றால்  அது வியப்புக்குரிய நிகழ்ச்சியாகப்படுகிறது. இளங்கோவுக்கு. “ஒரு தீ இன்னொரு தீயை வலம் வருவது அவருக்கு விந்தையாகப் படுகிறது.”

                கோவலன் கண்ணகி திருமணத்தை அங்கு இருந்த சுற்றத்தார்கள் மணமக்கள் இருவரையும் வாழ்த்தினர்.

                காதலன் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்

                தீதறு கெனஏத்திச் சின்மலர் கொடுதூவி

                அங்கன் உலகின் அருந்ததி அன்னாளை

                மங்கல நல்லமளி யேற்றினார்”(சிலம்பு :1:61 64)

                சுற்றத்தவரான மகளிர் அட்ட மங்கல மேந்தி மணமக்களிருவரும் கண்ணினும்  மனத்தினும் பிரியாது இருப்பாராக  இருவரும் தீதின்றி நீடுழி வாழ்க! என்று சில மலர்களைத் தூவி வாழ்த்தினர்.

                காதலர்களே நீங்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழுங்கள்  கை கோர்த்து வாழுங்கள்!” என்று சொல்வதற்குப் பதிலாககாதலர்களே! பிரியாமல் வாழுங்கள்! கோர்த்த கையை நெகிழவிடாமல் வாழுங்கள்! உங்களுக்கு நேரக்கூடிய தீது கெடுவதாக!” என்று வாழ்த்துகின்றனர்.

                இந்நிகழ்ச்சி அமங்கலம் கலந்த மங்கல வாழ்த்து என்று சொல்லலாம். இனி நிகழப் போவதை சிலம்பைப் படிப்பவர்களுக்கு முன்கூட்டியே நினைப்பூட்டுவதற்காக இப்படி அமங்கலம் கலந்த மங்கல வாழ்த்தைப் பாடினார் இளங்கோ3 என்கிறார் .பெ.சி.

                மங்கல வாழ்த்தை அடுத்துள்ள மனையறம் படுத்த காதையில் கண்ணகி-கோவலன் இவ்வாழ்க்கையின் தொடக்கம் கூறப்படுகிறது. அதற்கு மேல் உள்ள காதையில் அவர்களுடைய இல்வாழ்க்கை நல்வாழ்க்கை எனத் தக்க வகையில் இளங்கோவடிகளால் கூறப்பட வில்லை.

                முதல் நாள் பள்ளியறை நிகழ்ச்சி இளங்கோவடிகளால் கோவலன் மூலம் கண்ணகி வர்ணிக்கப்படுகிறாள். கோவலன் கண்ணகியின் திராக் காதலுடன் அவள் திருமுகத்தை நோக்கி கோவலன் பலவாறு வர்ணிக்கிறான். இவற்றை இளங்கோவின் வாக்காலேயே பார்ப்போம்.

                குழவித் திங்கள் இமையவர் ஏத்த

                அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்

                உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்

பெரியோன் தருக திருநுதல் ஆக என:

                அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்

                படைவழங்குவது ஒர்பண்பு உண்டு ஆகலின்

                உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்

                இருகரும் புருவம் ஆக ஈக்க

                மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்

                தேவர் கோமான் தெய்வக் காவல்

                படைநினக் களிக்க அதன் இடைநினக் கிடை என:

                அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்

                இறுமுறை காணும் இயல்பினின் அன்றே

                அம்சுடர் நெடுவேல் ஒன்றும் நின் முகத்துச்

                செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது!      (சிலம்பு :2: 38 52)

 

                கண்ணகியின் அழகை கோவலன் வருணிப்பது வேறு எந்தக் காப்பியத்திலும் இல்லாத ஒரு புது முறையாகும். மற்றக் காப்பியங்களிலே  காப்பிய நாயகியின் கண்களை வேற்படைக்கும்  நெற்றியை பிறைச் சந்திரனுக்கும்  இடையே மின்னலுக்கும் ஒப்பிடுவது வழக்கம். ஆனால் அதிலிருந்து சற்று வேறுபட்டு  கண்ணகியின் நெற்றியைக் சிவபிரான் சடையிலுள்ள பிறைச் சந்திரனுக்கும்  கண்களை முருகப் பெருமான் கையிலுள்ள வேலாயுதத்துக்கும்  இடையை தேவர் கோமானின் வஜ்ராயுதத்துக்கும் ஒப்பிடுகிறான் கோவலன் கண்ணகியின் புருவத்திற்கு காமனுடைய கரும்புவில்லை உவமையாகக் கூறுகிறான். நாட்டிலே கற்பு நெறியானது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகி விடுமானால் ஒழுக்கம் நிலைபெற்றுவிடும். அந்த நிலையிலே போர் நிகழாது. அப்போது காமனுடைய கரும்பு வில்லுக்கு வேலை இருக்காது. அதனாற்றான்  அவன் தனது வில்லைப் பிளந்து கண்ணகியின் புகுவங்களாகப் படைத்து விட்டான். என்று கோவலன் கண்ணகியை பாராட்டுகிறான். மேலும்

                மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!

                காசுஅறு விரையே! கரும்பே! தேனே!

                அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

                பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!

                மலையிடைப் பிறவா மணியே என்கோ?

                யாழிடைப் பிறவா இசையே என்கோ?

                தாழ்இருங் கூந்தல் தையால்! நின்னை”(சிலம்பு :2 :73 77)

 

கண்ணகியை கோவலன் முத்தே  பொன்னே பவளமே  கரும்பு தேன் என்று பலவாறு பாராட்டுகிறான். இவ்வாறு கண்ணகியும் கோவலனும் நிலா முற்றத்தில் நீங்காது இன்பநிலையுடன் இருக்கிறார்கள். கோவலனும் கண்ணகியும் சில ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என இளங்கோவடிகள் கூறுகிறார். அதற்கு பின் தான் மாதவியிடம் கோவலன் சென்று பல ஆண்டுகள் இருந்ததாக இளங்கோவடிகள் காட்டுகிறார். கற்புக் கனலியின் வாழ்க்கைத் தோற்றம் இது எனலாம். இவற்றை அடிகள் கண்ணகி கோவலன் இல்லற வாழ்க்கையாக காட்டுகிறார்.

இளங்கோ படைத்த வீர பத்தினி

                மலை வளம் காணவேண்டி சேரன் செங்குட்டுவன் பரிவாரங்கள் புடைசூழ புலவர் சாத்தனாருடன்  இளங்கோவடிகளும் நெடுவேள் குன்றம் சென்றடைகிறார்கள். அங்கிருந்த குறவர்கள் ஒரு கொங்கையை இழந்த பெண் வேங்கை மர நிழலில் நின்று தேவர்களுடன் வானூர்தி ஏறி வானகம் புக்கமையைக் கூற சேரன் செங்குட்டுவனிடம் கூற  அங்கிருந்த சாத்தனார் அப்பெண்ணின் வரலாற்றையாம் அறிவோம்என்று சாத்தனார் கூற  அப்பத்தினி காப்பியத்தை இளங்கோவடிகள் செய்தருளினார். இவை பதிகத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

                முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது

                அடிகள் நீரே அருளுக என்றாற்கு”(சிலம்புபதி)

                இக்காப்பியம் மூவேந்தர்க்கும் உரியது அதனால் நீங்களே அருளுக என்று சாத்தனார் கூறநாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்என்று இளங்கோவடிகள் பத்தினிக் காப்பியத்தை செய்தருளினார்.

                சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கற்கோயில் எழுப்பினான். ஆனால் அக்கோயில் இன்று காணும் இடம்மில்லாமல் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது எனலாம். ஆனால் இளங்கோ தன் இதயத்தில் இருந்து சொற்கோயில் எழுப்பினார். இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் தமிழ்படித்த உள்ளங்களிலும்  தமிழர்களின் வீடுதோறும் காப்பிய தலைவியாக நீங்கா இடம்பெற்றுள்ளாள் கண்ணகி.

                உயர்ந்த மனங்களை உயர்மனம் உடையவர்களே படைக்க முடியும். இளங்கோவடிகள் பண்பட்ட அறவோர் ஆகையால் மிக உயர்ந்த மனநிலையைத் தம் காவியத்தில் படைத்துக் காட்ட முடிந்தது”.4

                சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவி மானிடப் பெண்ணாக பிறந்திருந்தாலும்  கதையின் முடிவிலே உலகோர் தொழும் கற்புத் தெய்வமாகப் போகிறாள் என்பதை இளங்கோ காட்டுகிறார்.”

                புகார் நகரில் பிறந்து  மங்கல வாழ்த்துப் பாடலில் அறிமுகமாகி அக்காண்டம் முழுவதும் அமைதியின் உருவாகத் தோன்றுகிறாள் கண்ணகி. சிலப்பதிகாரத்தின் ஒன்பதாவது காதையாக உள்ள கனாத்திறமுரைத்த காதையில் தேவந்தியோடு பேசும் பேச்சே கண்ணகியின் கண்ணகியின் முதற்பேச்சு”.5 அதன் பிறகு அவள் பேசியது  தான் கண்ட கனவை தேவந்தியிடம் கூறிய போதுதான். இவ்வாறு இருந்தவள் மதுரையில் பாண்டியன் அவையில் வழக்குரைக்கின்றாள். பின் மதுரையை எரித்து வஞ்சிக் காண்டத்தில் தெய்வநிலையை அடைகிறாள். இப்படி ஒரு படிப்படியான வளர்ச்சியைக் காட்டிய ஆசிரியரின் திறம் பாராட்டத்தக்கதாகும். மேலும்.

                கண்ணகியின் முதற்பேச்சுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பின்னர் நடைபெற இருக்கும் கதை முழுவதையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகின்றது6” தொடக்கம் முதலே கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக்க வேண்டும் என்பதால் சில நெறிகளைக் கையாண்டுள்ளார் என சிலம்பொலி செல்லப்பன் கூறுகிறார்.

                கண்ணகியின் ஆருயிர்த் தோழி தேவந்தி  இவள் அந்தணப் பெண். சிறுவயது முதலே கண்ணகியும் தேவந்தியும் கண்ணகியின் வீட்டில் ஒன்றாக வளர்ந்தவர்கள்  கண்ணகி தன் கணவனைப் பிரிந்து வருந்துவது அறிந்து அவளையணுகிஅருகம்புல் நெல் ஆகியவற்றை அவள் மீது தூவி  கணவனோடு சேர்ந்து நீ இன்பம் பெறுவாயாக!” என்று வாழ்த்தினாள். காணாத்திறமுரைத்த காதையில் கண்ணகி தன் தோழியான தேவந்தியிடம் நான் தீய கனவினை கண்டேன்நான் என்னுடைய கணவனை இனிப் பெறுவேனோ என்று அஞ்சுகின்றேன்என கனவில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறாள்.

 

                கடுக்கும் என்நெஞ்சம் கனவினால் என்கை

பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்

பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை

இட்டனர் ஊரார் இடுதேளிட்டு என்தன்மேல்

கோவலற்கு உற்றது ஓர் தீங்குஎன்று அதுகேட்டு

காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன்

தீங்குற்றம் போலும் செறிதொடீஇ! தீக்குற்றம்

உற்றோனொடு உற்ற உறுவனோடு யானுற்ற

நற்றிறங் கேட்கின் நகையாகும்                         (சிலம்பு :9: 45 54)

கண்ணகி தேவந்தியிடம் கனவினால் அஞ்சுகிறது. எனது நெஞ்சம் என்று கூறுகிறாள். மேலும் நேற்றிரவு என் கணவன் கனவில் வந்து என் இருகை பற்றி அழைத்துச் சென்றார். பெரியதொரு நகரினுள் நாங்கள் புகுந்தோம். அந்நகரில் வாழும் மக்கள் இடுதேளைப் பிடித்து என் மீது போடுவதைப் போன்று ஏலாத ஓர் பழிச்சொல்லை எங்கள் மீது சுமத்தினார்கள். அந்தப் பழிமொழியால் என் கணவன் கோவலனுக்குத் தீங்கு நேர்ந்தது என்று பிறர் சொல்லக் கேட்டேன். உடனே நான் மன்னன் முன்பாகச் சென்று வழக்குரைத்தேன்! அவ்வழக்கால் அவ்வரசனோடு அந்த ஊருக்கும் பெருந்தீங்கு நேரிட்டது. தீக்கனவைக் கூறக் கூடாது. ஆதலால் அங்கு எமக்கு நேர்ந்த தீங்கினை நான் உனக்கு உரையேன். செறிந்த வளையல்களை அணிந்தவளே! அங்குற்ற தீங்கு நான் செய்த தீவினைப் பயன்போலும்! குற்றமற்ற என்னுடன் பொருந்திய மேலோனுடன் நான்பெற்ற நற்பேற்றினை நீ கேட்பாயானால் அதனால் உனக்கு நகைப்பு உண்டாகும் என்றாள். தேவந்தியிடம் தன் தீக்கனவை கூறி வருந்துகிறாள்.

கண்ணகி சொன்ன கனவைக் கேட்ட தேவந்திகண்ணகி! நீ உன் கணவனுக்குக் கசப்பாகிவிடவில்லை. முற்பிறப்பிலே ஒரு நோன்பினைச் செய்யாது தவறு இழைத்தாய். சோம குண்டம்  சூரிய குண்டம் என இரு பொய்கைகள் உள்ளன. அவற்றின் துறைகளிலே மூழ்கி அங்குள்ள காமவேள் கோயிலைத் தொழுத பெண்கள் பிரிந்த கணவனைத் திரும்பவும் அடைந்து இவ்வுலகில் இன்ப வாழ்வு எய்துவர். மறுமையிலும் போக பூமியிலே கணவனுடன் கூடி இன்புறுவர். நாமும் அங்கு சென்று நீராடுவோம்  வாஎன்று அழைத்தாள். தேவந்தி கூறியதைக் கேட்ட கண்ணகிகாமனைத் தொழுவது கற்புடைய மகளிர்க்குப் பெருமை தருவது அன்றுஎனக் கூறினாள்.

சிலப்பதிகாரப் பெண்டிர் தம் சொல்லும் செயலுமே காப்பியத்தின் பலதிறப்பட்ட திருப்பு மையங்களாக அமைகின்றன.7”. என்கிறார் .செயப்பிரகாசு அவர்கள்.

கண்ணகி தேவந்தியிடம் தன் கணவைக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது  கோவலன் கண்ணகியின் மனையை அடைந்து நேரே பள்ளியறை புகுந்து  தன் மனைவியை அருகழைத்துஉன்னுடைய மேனி மெலிந்துவிட்டதே! முகம் ஒளியிழந்து விட்டதே!” என்று கூறி வருந்தினான். தான்வஞ்ச நெஞ்சப் பரத்தையுடன் கூடி  கைப்பொருளையெல்லாம் இழந்த எனது நிலையை எண்ணி நான் வெட்கப் படுகிறேன்.” என்று மாதவியை வெறுத்தும் பழித்தும் பேசினான். கண்ணகி  பல்லாண்டுகள் பிரிந்திருந்த கணவன் திரும்பவும் தன்னை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைந்தவளாய் நகைமுகங்காட்டிகாற்சிலம்புகள் இரண்டுள கொள்ளுங்கள்என்று இதமாமக் கூறினாள்.

கோவலன் எழுக என்றவுடன் கண்ணகி சிந்திக்காமல் கோவலனுடன் மதுரை புறப்பட்டாள். கோவலன் தவறு செய்ததை நேரிடையாக கூறவில்லை. மாறாக குறள்வழி கண்ணகியை நோக்க முடியும்

பெண்ணின் பெருந்தக்க யாவுள தற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின்”8               (குறள்;;;;:54)

பெண்களின் கற்புக்கு திண்மையான உறுதியுடன் இருந்தால் இந்த உலகில் அதை விட சிறந்தொரு கற்பு இல்லை. இக்குறளுக்கு சான்றாக கண்ணகி விளங்குகிறாள். பின் கண்ணகி மதுரை சென்று வழக்குரைத்து இறுதியில வஞ்சியை அடைந்து வானுலகு செல்கிறாள். இளங்கோ படைத்த காப்பியத்தை பின்வருமாறு கூறுகிறார். மு..“உயர்ந்த மனங்களை உயர்மனம் உடையவர்களே படைக்க முடியும். இளங்கோவடிகள் பண்பட்ட அறவோர் ஆகையால் மிக உயர்ந்த மனநிலையைத் தம் காவியத்தில் படைத்துக் காட்ட முடிந்தது என்று டாக்டர் மு..கூறுகிறார். மு..கூறும் மிக உயர்ந்த மனநிலை கற்புக்கரசி கண்ணகிக்கு பொருந்தும்.

கற்பின் கனல் கற்புடைத் தெய்வம்

                உயிரினும் சிறந்தது நாண்  அந்த நாணினும் சிறந்தது கற்புஎன்று தொல்காப்பியர் கூறுவார். பெண்களின் தலையாயப் பண்பாகக் கற்பு போற்றப்பட்டுள்ளது. கற்பு என்ற சொல் விரிந்த பொருளுடையது.

                பேராசிரியர் .சுப. மாணிக்கம் அவர்கள் நன்கு புலப்படுத்துகிறார்.  அகத்திணைக்கண் வரும் களவு  கற்பு என்பனவோ இலக்கணக் குறியீடுகள்”. இவை பொதுவாக நாம் அறியும் பொருளோடு இன்னும் விரிந்த பொருளை உடையன.

                மணமும் மணப்பின் நிகழும் காதற் செய்கைகள்

                எல்லாம் கற்பெனப்படும்                                (தொல்.1444)

                பன்மாண் கற்பின் நின் கிளை முதலோர் வடும்                (புறம் : 163)

என்னும் புறநானூற்றுத் தொடரில் கற்பென்னும் பொருட் பரப்பை அறியலாம்.

                பெண்களின் கற்புத் திறத்திற்கு அருந்ததி  வடமீன்  சாலியொருமீன் போன்றோர்கள் கூறப்படுகிறார்கள். சிலம்பில் கற்பு என்ற ஒழுக்கத் திண்மை அன்புத் திண்மை என்ற பொருளிலேயே கையாளப்பட்டு வந்துள்ளதாக டாக்டர்..சுப.மாணிக்கம் கூறுகிறார். இதை உணர்த்தும் விதமாக இரண்டு இடங்களில் இளங்கோவடிகள் சுட்டும் போது

                மங்கை மாதர் பெருங்கற்பு”9என்றும்மன்னு மாதர் பெருங்கற்பு  (சிலம்பு : 7 : 6)என்றும் குறிக்கிறார்.

                கண்ணகியிடம் பெண்மையின் புரட்சியை அமைப்பார் அடிகள். பெண்ணுக்குரிய பண்புகளாகச் சில வரையரை கூறுவது மரபு.

                அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த

                நீச்சமும் பெண்பாற்கு உரிய என்ப”(தொல்.1045)

                செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

                அறிவும் அருமையும் பெண்பாலான.”(தொல்:1155)

 

                அச்சம் எனும் பண்பு கண்ணகியிடம்  அதிகமாக அமையவில்லை என்றே கூறலாம். ‘கடுக்கும் என் நெஞ்சம் கனவினால்என்பதிலும்வம்ப மரத்தை வறுமொழியாளரின் தீ மொழி கேட்டுக் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்கஎன்பதிலும் கண்ணகியிடம் அச்சம் வெளிப்படுகிறது. கணவன் பாண்டியனால் கொலையுண்டது பற்றிக் கேள்வியுற்றபோதும்அலவும் என் நெஞ்சுமயங்கும் என் நெஞ்சு எனக் கலங்குகிறாள். எனினும் தீக்கனா நினைந்து வழக்குரை மேற்கொள்கின்றாள். இந்நிலை தலைவியின் அச்சப்பண்பை நீக்கும் புரட்சியைச் செய்கிறார் என்பது போதரும்”10 என்று கூறுகிறார் அன்னி தாமசு. மிகச்சிறிய சொற்கள் அல்லது சொற்றொடரை மட்டுமே புகார்க் காண்டத்தில் கண்ணகிக்கு உருவாக்கித்தரும் அடிகள் மதுரைக்காண்டத்தில் புரட்சி பெண்ணாக வீரமிக்க எழுச்சி நாயகியாக பார்க்க முடிகிறது.

                சிலம்பு கண்ணகியின் கற்பு மேம்பாட்டை போன்று மாதவியின் பெருமையையும் கூறுகிறது.

                திறன் அழியாத ஓவிய கலைஞன்  வெண்மையைக் காட்ட வேறொரு கருமையைத் தீட்டுவான்”. ஆயின் கலைத்திறன் மிக்க ஓவியப் புலவனோ  தூய வெண்ணிறத்திலேயே இருவகை அழகைக் காட்ட வல்லவன்.கண்ணகியின் கற்பு மேம்பாட்டை விளக்குவதற்காக இளங்கோவடிகள் மாதவியிடம் மாசு புகுத்தவில்லை. கண்ணகியின் கற்பு விளங்கும் விளக்கத்திலேயே மாதவியின் கற்பும் கலந்து ஒளிறுமாறு செய்த கலைத்திறன் நுண்ணிதின் உணர்ந்து வியக்கத்தக்கது.11” என்கிறார் டாக்டர் மு... இவ்வாறு பெண்ணின் பெருமையை முதன் முதலாகக் காவிய வடிவில் உலகிற்கு உணர்த்திய பெருமையும் இக்காப்பியத்தையே சாரும்.

                கண்ணகி தெய்வநிலை அடைவதை படிப்படியாக காட்டுகிறார். இளங்கோவடிகள். மதுரையை நோக்கி கண்ணகி  கோவலன் கவுந்தியடிகள் மூவரும் நடந்து செல்கின்றனர். கோடைக் காலமானதால் கதிரவன் கடுமையாக எரித்தான் அதனால் கண்ணகி தேவி உளம் வருந்தினாள். பாலை வனத்திலே தொடர்ந்து நடந்து செல்ல இயலாதவளானாள். அவளுடைய சிற்றடிகள் சிவந்தன. அடிக்கடி குறு மூச்செறிந்தாள். அவளுடைய நிலை கண்ட கோவலன் வழிப்பயணத்தை நிறுத்தி  அருகிலிருந்துஐயைஎன்னும் தெய்வத்தின் கோயிலுக்கு அவளை அழைத்துச் சென்றான். யாரும் அறியாத நிலையில் மூவரும் அங்கு நின்றனர்.

                அந்த நேரத்தில் மறவர் குலப் பெண்களும் ஆண்களும் கூடி  பாலை நிலத்தில் கோயில் கொண்டுள்ள தங்கள் குலத்தெய்வமான கொற்றவை மீது வரிப்பாடல் பாடி வழிபடலாயினர்  மறவர் மகளான சாலினி என்பாள் மீது கொற்றவைத் தெய்வம் தோன்றி கண்ணகியை பார்த்து தெய்வநிலை அடைவதற்குப் படிநிலையாக தெய்வமேறப் பெற்ற சாலினியின் வாயிலாக

                இவளோ கொங்கச் செல்வி  குடமலையாட்டி

                தென்தமிழ்ப் பாவை  செய்தவக் கொழுந்து

                ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய

                திருமா மணி         (சிலம்பு : 12 : 47  50)

இவளே கொங்கு நாட்டின் தவபுதல்வி  குடமலைத் தெய்வம்  தென்னகம் ஈன்ற தமிழ் நாட்டின் தவச் செல்வி இந்த உலகத்திற்கு ஒளி விளக்காக திகழ்பவள் என சாலினியின் வாயிலாக இளங்கோ கூறிகிறார்.

                இவை பின்னால் நிகழப் போவதை முன்கூட்டியே சாலினியின் வாயிலாக தெய்வம் ஆகப்போவதை உணர்த்துகிறார். மனித குலத்தின் பொதுத் தெய்வமாகக் கண்ணகியைச் செய்துவிட வேண்டுமென்பது இளங்கோவின் எண்ணம். அந்த எண்ணத்தையே தெய்வமேறிய சாலினியின் மூலம் வெளிப்படுத்துகிறார். மேலும் பாசம் என்னும் நிலையைக் கடந்த கவுந்தியடிகள் கூட கண்ணகியின் மேல் பாசங்கொண்டு மாதரியிடம் கண்ணகியையும் கோவலனையும் அடைக்கலப் படுத்தும் போது கண்ணகியை மாதிரி எவ்வாறு பாககாக்க வேண்டும் என்று கூறுகிறாள்.

                கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது

                பொற்புடைத் தெய்வம் யாங் கண்டிலமால்”(சிலம்பு : 15 : 43  44)

கண்ணகியின் கற்புத் திறத்தைக் கவுந்தியடிகள் வருணிப்பதைப் பார்ப்போம். கவுந்தி  சமண சமயத் துறவி. அவளேகற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்என்று பெருமிதத்துடன் கூறுகின்றாள். இதன் மூலம் கண்ணகி மண்ணக மாந்தர்க்குத் தெய்வமாகப் போகும் செய்தியை முன் கூட்டியே வழங்குகின்றார் இளங்கோ

                கவுந்தியடிகளை உளமாற்றம் செய்கின்றவாறு கண்ணகியின் தியாக உணர்வும் கற்புத் தின்மையும் இருந்தன எனக் கொள்வோமாயின் வியப்பு நீங்கி கவுந்தியடிகளோடு நாமும் கண்ணகியை வழிபடத் தொடங்கி விடுவோம். கவுந்தியடிகள் தந்த சான்றிதழ் இது”12 என்கிறார் .மீனாட்சி சுந்தரம். இக்கருத்தை அடிகள் கண்ணகியைத் தெய்வமாக்க முயற்சிப்பது போல் தோன்றுகிறது. இல்லற வாழ்க்கையில் உள்ள பெண்னைத் தெய்வம் என்று ஒரு சமணத்துறவி ஏற்றுக் கொள்வது போல் அமைத்துள்ளார். இளங்கோவடிகள்  இவை உலககோர்த்தொழும் பத்தினி தெய்வமாகிறாள் என்பதன் குறியீடு எனலாம்.

அறக்கற்பும் மறக்கற்பும்

                கற்புக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து அறக்கற்பு மறக்கற்பு என்று பிரிக்குங்கால் கண்ணகியை மறக்கற்பினள் என்பர். ஆறிய கற்பு  சீறிய கற்பு என்ற வகை பாட்டில் சீறிய கற்புக்குக் கண்ணகியை எடுத்துக் காட்டுவர். இன்னும் கற்புப் படிநிலைகள் பலவற்றைச் சொல்லி அவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு நற்சான்றாகக் கண்ணகியை முன்நிறுத்துவர்.

                சிறையிருந்த செல்வியின் ஏற்றம் கூறும் நூல் என இராம காதை புகழ்பெறுவதைப் போலச் சிலம்பின் வென்ற சேயிழையைப் பாடும் நூல் எனச் சிலம்பினைச் செப்புவர்.

                காப்பிய ஒட்டத்தில் மிகக் குறைவாகப் பேசுபவளைப் போல அமைதியும் அடக்கமும் கொண்டவளாகப் படைக்கப் பெற்றிருப்பவள் கண்ணகி. ஆனால் ஆங்காங்கே நறுக்குத் தெரித்தாற் போன்றும்  நியாய அநியாயங்களைக் காட்டி நீதிக்குக் குரல் கொடுப்பளைப் போன்று அவள் பேசியவை  அழுத்தமானவை  பொருள் பொதிந்தவை அவ்விடங்களில் எல்லாம் அவள்நா அழுப்பிய எதிர்க்குரல்கள் தனித்த முத்திரை பெற்றவை.13

                குறியாக் கட்டுரையாகப் பலவற்றைப் பேசுகின்ற கோவலனின் சொற்களைக் கருதுவதைவிட வாழ்வில் பட்டறிவுகள் பலவற்றைப் பெற்ற நிலையில் உள்ள கொலைக்களக் காதை கோவலன் உதிர்க்கும் சொற்களை நினைவு கூர்தல் நல்லது.

                குடிமுதல் சுற்றமும் குற்றிளை யோகும்

                அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி

                நாணும் மடனும் நல்வோர் ஏத்தும்

                பேணிய கற்பும் பெருந்துணையாக

                என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த

                பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!

நாணின் பாவாய்! நீள் நில விளக்கே

கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி(சிலம்பு  : 16 : 84  91)

கோவலன் கண்ணகிக்கு முன்நின்று கோவலன் உதிர்த்த வார்த்தைகள். முழுமையாகக் கண்ணகியையும் தன்னையும் உணர்ந்து பேசிய சொற்கள் இவ்வாறு தகுதிப்பாடுகள் நிறைந்த கண்ணகி சராசரியிலிருந்து வேறுபட்ட கதைமாந்தராகச் சிலம்பில் தோன்றுகின்றாள்.

புகார் காண்டத்தில் கணவன் தன்னை மறந்து மாதவி வீட்டில் தங்கியிருந்த போது  அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய  பவள வாள் நுதல் திலகம் இழப்ப  மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப  தாலியான மங்கல அணி ஒன்றைத் தவிர மற்ற அணிகளைத் துறந்து கண்ணகி அவலநிலையில் வாழ்ந்ததும் அறக்கற்பு.

 

கோவலன் திரும்பவும் கண்ணகியை அடைந்து

சலம்புனர் கொள்கைச் சலதியோடு ஆடி

குலம்தரு வான்பொருள் குன்றந் தொலைத்த

இலம்பாடு நாணுத் தரும் எனக்கு     (சிலம்பு : 9 : 69  71)

என்று கூறி வருந்திய போது சிலம்புள கொள்ளுங்கள்என்று சொல்லி தன்னிடம் எஞ்சியிருந்த காற்சிலம்புகள் இரண்டையும் கோவலனிடம் கொடுத்ததும் அறக்கற்புதான் கண்ணகி தந்த சிலம்புகளைப் பெற்றுக் கொண்ட கோவலன்            

                சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு

உலந்த பொருளீட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர்

மாட மதுரை யகத்துச் சென் றென்னோடிங்கு

ஏடலர் கோதாய் எழுக!”(சிலம்பு :9 : 74  77)

என்று கண்ணகியை கோவலன் அழைத்த போது மறுப்பு ஏதும் சொல்லாமல் மண் மகளறியாத வண்ணச் சீறடி படைத்த கண்ணகி தேவி கோவலனைப் பின்பற்றி மதுரைக்குச் சென்றதும் அறக்கற்புதான். கோவலனை எதிர்த்து பேசாத சூழ்நிலையை இக்காதையில் இளங்கோவடிகள் படைத்துக் காட்டுகிறார்.

                மதுரையிலே பாண்டி மன்னனால் கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்டதும்  கொலைக் களத்திற்கு ஓடோடிச் சென்று வெட்டுண்டு கிடந்த கணவனைக் கண்டு வேதனைப் பட்டு அழுதாளே  அதுவும் அறக்கற்புதான் கொலைக்களத்தில் வெட்டுண்டு கிடந்த கணவன் உயிர்பெற்று எழுந்து சொர்கம் சென்றானே அப்போது அவனுடன் சேர்ந்து கண்ணகியும் சொர்க்கம் புகுந்திருந்தால்  அதுவரை அவள் கடைப்பிடித்த அறக்கற்புக்கு அது சிகரமாக அமைந்திருக்கும்.14அப்படிச் செய்யாமல்

                காய்சினம் தனிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்

                தீவேந்தன் தனைக் கண்டு திறம் கேட்பல் யான்”(சிலம்பு :19 : 70 71)

என்று கூறி  மதுரை மன்னனுடைய அரசவைக்கு தானே வலுவாற் சென்றாளே. அது அறக்கற்பு ஆகாது என மா.பெ.சி கூறுகிறார்.” சென்ற விடத்தில் மன்னனிடம் வழக்குரைத்து. அவன் உயிர் துறப்பதற்குக் காரணமானாளே அதுவும் அறக்கற்பு ஆகாது. மன்னன் உயிர் துறந்ததை கண்ணாரக் கண்ட பின்னரும் சினம் தனியாமல்

ஓட்டேன்  அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்என்று சூளுரைத்துக் கூடற்பதியைக் கொளுத்தி முடித்தாளே இது அறக்கற்பிற்கு மாறாக மறக்கற்பு என்றே கூறலாம்.

கோவலன் கொலையாவதற்கு முன்வரை கண்ணகி கடைப்பிடித்த அமைதியைஆறிய கற்புஎன்றும் அவன் கொலையான பின்னர் கண்ணகி வெளிப்படுத்திய வீரத்தைசீறிய கற்புஎன்றும் சொல்லுகிறார் அடியார்க்கு நல்லார்.

இளங்கோவடிகளும் ஆறிய கற்பைக் கடந்து சீறிய கற்பைக் கண்ணகி கடைப்பிடித்த பின்னர் அவளுக்குவீரபத்தினிமா பத்தினி’‘பெரும் பத்தினிஎன்றெல்லாம் பட்டங்கள் கொடுத்திருக்கிறார். இத்தகு வீரபத்தினியை சிலம்பில் தவிர வேறு மொழியிலுள்ள காப்பியம் எதிலும் காண முடியவில்லை.15

கற்புடையோர் என்ற சொல்லிற்குப் பதிலாக பத்தினி  பத்தினிப் பெண்டிர் என்ற சொற்கள் சங்க இலக்கியங்களிலோ  தொல்காப்பியத்திலோ இடம் பெற வில்லை. முதன் முதலில் சிலம்பில் மட்டுமே கையாளப்படுகிறது.16 என்று .சுப்பிரமணியன் கூறுகிறார்.

கற்புடைய மகளிரின் ஏற்றம் கூறும்நூல் சிலம்பு. சிலம்பிலே காப்பியத் தலைவி கண்ணகி மிக உயர்ந்த உன்னத நிலையை அடைந்ததை தம் காப்பியத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார் இளங்கோவடிகள்.

போற்றா ஒழுக்கம் புரிந்தீர்

                உலகோர் ஏத்தும் பத்தினிப் பெண்ணாக பத்தினி கடவுளாக இருக்கும் கண்ணகி தன் கணவனைத் தவிர வேறு தெய்வம் தொழாதவளாக இருக்கிறாள். இதனையே மு..அவர்கள்

                கணவனை விட்டு வேறு எவரையும் எந்தத் தெய்வத்தையும் வழிபடாத வாழ்வே கற்புடைய வாழ்வு என்பது அக்காலத்தோரின் கொள்கை”.17 என்பார் டாக்டர் மு..

                கண்ணகியின் தோழி தேவந்தி கணவனை திரும்ப பெறவேண்டுமானால் காமவேள் கோட்டம் சென்று சோம குண்டம்  சூரியகுண்டம்  சுனை மூழ்கித் தொழுதால் கணவனை திரும்ப பெறலாம் என்று கூறபீடன்று என்று கூறி மறுக்கிறாள்.

                                தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

                                பெய்எனப் பெய்யும் மழை”18                   (குறள் : 55)

                வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழைபெய்யும்! என்ற குறளுக்கேற்ப கண்ணகி கற்புக்கரசியாய் வாழ்ந்து காட்டியவள்.

                சிலம்பில் கண்ணகியை பற்றிக் கூறும்பொழுது சிலப்பதிகாரத்திலே வெறும் காப்பியத் தலைவியாக மட்டுமே கண்ணகி படைக்கப்பட்டிருந்தால் அவளது வாழ்க்கை களவியிலேயே தொடங்கியிருக்கும். கோவலனோடு அவள் நடத்திய இல்வாழ்க்கையும் விரிவாகக் கூறப்பட்டிருக்கும். மாறாக அவள் பத்தினித் தெய்வமாக்கப்பட விருக்கிறாள். அதனால் தான் களவியலுக்கு அவள் விலக்காகிவிட்டாள்  அவளுடைய இல்வாழ்க்கைக்கும். இருட்டிப்பு ஏற்பட்டு விட்டது என்கிறார் .பொ.சி.19

                கண்ணகி மாதரி வீட்டில் கோவலனுக்கு உணவு படைக்கிறாள். அமுது செய்து வாய்பூசி நிருண்டு இனிதிருந்த  வேளையில் கோவலன் கண்ணகியை நோக்கிஏடலர் கோதாய் எழுகஎன்று சொன்னவுடன் வந்து விட்டாயே  எயினர் ஆறலைக்கும் சுரநெறியில் பருக்கையின் மீது அடியிட்டு நடப்பது கண்ணகியால் ஆகுமா என்றெண்ணி எம்முதுகுரவர் என்ன துன்பம் அடைந்தார்களோ. முன் செய்த தீவினைப் பயனோ? என் உள்ளம் கலங்குதலால் எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. வீணரோடும் விடரோடும் கூடி  பொச்சாப்புண்டு நல்லொழுக்கம் கெட்டேன். இனி எனக்கு நற்கதி உளதாகுமோ? இருமுதுகுரவர்க்கு செய்யும் ஏவலையும் பிழைத்தேன். உனக்கும் சிறுமை செய்தேன். இவ்வொழுக்கம் இழுக்கமென்பது சிறிதும் பார்த்திலேன். யான் மதுரைக்கு வருக என்றவுடன் ஒருப்பட்டு வந்தாய் பொன்னே! கொடியே! கற்பின் கொழுந்தே என்று பலவாறாக பாராட்டுகிறான்.

                இவை கொலைப்படும் முன் கோவலன் கண்ணகியைப் பாராட்டும் சூழலில் அவள் கற்புடன்  நானும் மடனும் சிறப்பித்து மொழியப்படுகின்றன.

                நாணும் மடனும் நல்லோர் ஏத்தும் என்ற பண்பு விளக்கம் கோவலன் கண்ணகியை பிரிவதற்கு முன் மொழியப்படுகிறான். வழக்குரைச் சூழலில் கண்ணகியைக் காணும் போது தொல்காப்பியம் கூறும்அச்சமும் நாணும் மடனும் முந்துறத்த நிச்சமும் பெண்பாற்குரியஎன்ற முதல் விளக்கமின்றி செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலென்று இரண்டாம் விளக்கம் கண்ணகிக்கு ஏற்றதாகப் புலப்படுகின்றது”20 என டாக்டர் அன்னி தாமசு கூறுகிறார்.

                ஆயர்பாடியிலே கோவலன் பலவாறு பாராட்டி பேசிய நிலையில் கற்பின் கனல் கண்ணகி கோவலனை நோக்கி சொல்லம்புகளால் வீழ்த்துகிறாள். புகாரில் கோவலன் தன்னை விட்டு பிரிந்திருந்ததனால் மனை வாழ்க்கைக்குரிய அறங்களைக் கணவனோடு கூடி நிறைவேற்றும் மனைவியாக வாழ முடியாத நிலையில் தான் இருந்ததை

                அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

                துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த                          (சிலம்பு :16 : 71 73)

கண்ணகி உள்ளம் நைந்து உருகி கோவலனை நோக்கி தாங்கள் என்னைப் பிரிந்ததால் நான் அறவோர்க்கு அளித்தலையும்  அந்தணரைப் போற்றுதலையும்  துறவியரை எதிர்கொண்டு பணிவிடை செய்தலையும்  சான்றோர் போற்றும் சிறப்புடைய விருந்தினரை வரவேற்று உபசரித்தலையும் இழந்திருந்தேன் என்று இதயக் குமுறலோடு எடுத்துக் கூறினாள்.

                கோவலன் பிரிவால் தனது இளமை பாழானதற்காகக் கண்ணகி வருந்தவில்லை. “ஒரு மனைவிக்குரிய அறங்களைச் செய்வதற்கு உதவியாகத் தாங்கள் என்னுடன் கூடி வாழவில்லையே!” என்று தான் கூறினாள். இதனால் ஒருத்தனும் ஒருத்தியும் கூடி நடத்தும் மனைவாழ்க்கையின் மாண்பினை தமிழர் சமுதாயத்திற்கு கண்ணகி மூலம் நினைவூட்டுகின்றார்.21 இளங்கோ என்கிறார் .பொ.சி. மேலும் கண்ணகி நுமது பிரிவால் என் மனத்துள் துயரமே நிறைந்திருந்தாலும்  உமது பெற்றோர் அறியா வண்ணம் அதனை மறைத்துக் கொண்டு  என் உதட்டிலே புன் சிரிப்பை வரவழைத்து  அவர்களை மகிழவைக்க முயன்றேன். ஆனால் நிறைமதியினரான உமது பெற்றோர் என் மனத்துயரையறிந்து வருந்தினார்கள் என்று கூறுகிறார்கள்.

                நம் குலத்திற்கே ஒவ்வாத ஒழுக்கத்தை கடைபிடித்தீர்கள் என்று கூறுகிறாள்.

பெருமகன் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்

மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்

முந்தை நில்லா முனிவுஇகந் தனனா

அற்புளம் சிறந்தாங்கு அருண்மொழி அளைஇ

ஏற்பாராட்ட  யானகத்து ஒளித்த

நோயும் துன்பமும் நொடிவது போலுமென்

வாய்அல் முறுவற்கு அவர் உள்ளதும் வருந்தப்

போற்றா ஒழுக்கம் புரிந்தீர்! யாவதும்

மாற்றா உள்ள வாழ்க்கையேனாதலின்”(சிலம்பு :16: 74 82)

கோவலனை முகத்தில் அறைந்தாற் போன்று போற்றா ஒழுக்கத்தை கடைபிடித்தீர்கள் என்றும்   யான் பெண்களுக்கேயுரிய கற்பு நெறியைக் கடைப்பிடித்துஎழுகஎன்று தாங்கள் ஆணையிட்டவுடன்  அந்த ஆனையை ஏற்றுத் தங்களைப் பின்பற்றி வந்தேன் என்றாள் கண்ணகி.

புகார் நகரில் மாதவியைப் பிரிந்து வந்த கோவலனிடம் வாதம் ஏதும் புரியாத கண்ணகி மதுரையம்பதியில் ஆயர்குடியிருப்பில் தன் கணவனைப் பற்றிக் கணவனிடத்தே பேசுவது வியப்பிலும் வியப்பைத் தரும். அது  மரபுக்கு எதிரான குரல் இன்னும் சொல்லப் போனால் பெண்ணியத்தின் முதற்குரல் அது எனக் கூறினால் பிழையாகாது.”22 கண்ணகிக்கு முன்பு வரை எந்தப் பெண்ணும் தன் கணவனை நோக்கி இவ்வாறு கூறியுள்ளமைக்கு இலக்கியச் சான்றுகள் இல்லை. பரத்தமை மேற்கொண்டு இல்லம் திரும்பிய கணவனைவாயில் மறுத்தல்என்ற பெயரால் சற்று நேரம் நிறுத்திவைத்த குறிப்புகள் சங்கச் செய்யுள்களில் காணப்படுகின்றன. பின்னர் வந்ததீண்டேன் நின்னைக் திருநீலகண்டம்என்ற புகழ்மிக்க சொற்றொடருக்கு மூலவித்தாகச் சங்கப்பா ஒன்றை எடுத்துக்காட்டுவாரும் உளர். எனினும் அவற்றை ஊடலின் ஒரு பகுதியென்று கருதுவதே பெரும்பான்மையாக இருந்துள்ளது எனலாம்.

போற்றா ஒழுக்கம் என்ற சொல் உணர்த்துகின்ற அடர்த்தியான வசவு அவ்விடங்களில் இருப்பதாகக் கருத முடியவில்லை. பரத்தமையை நாடியதற்காகத் தலைவன் மீது கோபம் கொண்டவர்களைப் போல நடிப்பதாகவே பலரும் விளக்கம் தருகின்றனர்.

தலைவனின் முகத்துக்கு நேரேநீவிர் போற்றா ஒழுக்கம் புரிந்தீர்என முகத்துக்கு நேரே அறைந்தாற் போன்று யாரும் கூறவில்லை. வாழ்வுக்கு உகந்தாயில்லாத வாழ்வு முறையை நீங்கள் ஏற்றீர்கள் என்ற கண்ணகியின் குற்றச்சாட்டு மூன்றாம் மனிதர் முன்னிலையில் எழுப்பப் பெறவில்லை  இவற்றை பார்க்கும் பொழுது கண்ணகியின் மிகஉயர்ந்த மனநிலையை உணர்த்துகின்றது. கண்ணகி புதுமை பெண்ணாக புரட்சி பெண்ணாக பொலிவுறுகிறாள்.

பூம்புகார் பத்தினி

                கண்ணகியை பத்தினி தெய்வமாக்கியிருக்கிறார் இளங்கோவடிகள். “கற்புடையோர் என்ற சொல்லிற்குப் பதிலாக பத்தினி  பத்தினிப் பெண்டிர் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. பத்தினி என்ற சொல் சங்க இலக்கியங்களிலோ  தொல்காப்பியத்திலோ இடம்பெறவில்லை முதன்முதலில் சிலம்பில் மட்டுமே கையாளப்பட்டுள்ளதுஎன்று கூறுகிறார் .சுப்பிரமணியன்.

                கண்ணகி கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டு ஆற்றுணா பெருந்துயரத்தை அடைகிறாள்  விழுந்தாள்  எழுந்தாள் உள்ளம் பதைபதைத்து கோவலன் கொலையுண்ட இடத்தை அடைந்து வெட்டுண்ட கோவலனின் உடலை பார்த்து கதறி அழுகிறாள்.

                புண்தாழ்குருதி புறம்சோர  மாலைவாய்

                கண்டாள்  அவள் தன்னைக்  காணாக் கடுந்துயரம்”(சிலம்பு :9 : 37 - 38)

ஆறாத துயரத்துடன் எழுந்து கோவலனைக் கள்வன் என்று சுமத்தப்பட்டவர்களை நீதி கேட்பேன் என்று காய்கதிர் செல்வனே என் கணவன் கள்வனோ என்று கேட்கிறாள் வானில் அசரிரீ உன் கணவன் கள்வன் அல்லன் இந்நகரினை தீ உண்ணும் என்று கூற கண்ணகி தேரோடும் மதுரை வீதிகளிலே பலவாறு புலம்பி மன்னனின் அரண்மனை வாயிலை அடைந்து மன்னனிடம் சென்று தேரா மன்னா? என்று வழக்குரைக்கிறாள். தென்னவன்கள்வனைக் கோறல் கொடுங் கோலன்றுஎன்று கூற கண்ணகிநற்றிறம் படராக் கொற்கை வேந்தேஎன்று கூறி ஆவேசமாக காற்சிலம்பை உடைத்து எறிகிறாள். மன்னன் சிலம்பில் இருக்கும் மாணிக்க பரல்களை கண்டு தவறாக நீதி வழங்கியதற்காக தன் உயிரையே விடுகிறான். கோப்பெருந்தேவியும் தன் உயிரையே விடுகிறாள். பாண்டியன் உயிர் நீத்த கணத்திலேயே பாண்டிமா தேவி உயிர் நீத்ததையும் தான் உயிருடன் இருப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாள் கண்ணகி. கற்பு நெறியிலே கோப்பெருந்தேவி தன்னை முந்திக் கொண்டு விட்டது. அவளுக்குத் தெரிகிறது. கணவனோடு உடன் உயிர் விடுவதிலே தான் பின்தங்கி விட்டதற்குச் சமாதானம் சொல்ல நினைக்கிறது கண்ணகியின் உள்ளம். அதற்கு முன் கோப்பெருந்தேவியின் உயிர்த்தியாகத்தால் தனக்கு ஏற்பட்ட மனவேதனையை வெளிப்படுத்துகிறாள் பூம்புகார்ப் பத்தினி பூம்புகாரில் வாழ்ந்த ஏழு கற்புடைய மகளிர்  பற்றி கூறி தானும் அவளை போன்றவளே எனக் கூறுகிறாள்.

கோவேந்தன் தேவி! கொடுவினை யாட்டியேன்

யாவுந்தெரியா இயல்பினேன்;: ஆயினும்

முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்”(சிலம்பு :21: 1 4)

மதுரை மன்னனின் மனைவியே! யான் ஒரு கொடிய வினைக்குரியவளாகி விட்டேன். தேவி! நீ உயிர்த் தியாகம் புரிவதற்கு நான் காரணமல்லேன் ஆயினும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழியும் உண்டு. அதைத்தான் உன் விசயத்தில் நான் கண்ணெதிரில் காண்கின்றேன்என்கிறாள் கண்ணகி.

அநீதி கண்ட இடத்தில்  அந்த அநீதி இழைத்தவன்

அரசனேயாயினும்  அந்த அநீதியைஅநீதி

இழைத்தவனை அவனுக்கு அடங்கி வாழும்

அடிமைச் சமுதாயத்தை வேரும் வேரடி

மண்ணும் இல்லாமல் சுட்டுப் பொசுக்க

வேண்டும் என்ற புரட்சி நெறியை உலகுக்குப்

போதித்த முதற்புலவர் இளங்கோ”23 என்று .பொ.சி. கூறுகிறார்.

வளைந்த செங்கோலைத் தன் உயிர் கொடுத்து தாங்கியவன் பாண்டியன். இந்நிலையில் பாண்டியனின் தீதற்ற நிலையைஅந்த உயர்ந்த நிலைக்காகவே போற்றுவார் யாரும் இலராயினர். எனவே எல்லை மீறிய நிகழ்ச்சி ஒன்று உள்ளே நுழைகிறது. கண்ணகியே தெய்வ வடிவில் தோன்றி கூறுவதை விட வேறு சிறந்த முறை ஒன்றும் இருக்க முடியாது என்று கருதியே பத்தினித் தெய்வத்தை வானிலே ஒளிரச் செய்கிறார் இளங்கோவடிகள் என்பது ஏற்புடையதே24 என்று .ரா.போ. குருசாமி கூறுகிறார்”.

கண்ணகி கூறிய புகார் நகர பத்தினிப் பெண்டிர்

                கண்ணகி பாண்டியன் அரண்மனையில் கோப்பெருந்தேவியை பார்த்து புகாரில் வாழ்ந்த ஏழு கற்புடைய மகளிர் பற்றிக் கூறுகிறாள். கண்ணகி புகழ்ந்த ஏழு பத்தினியரின் வரலாற்றை இளங்கோ படைத்த படியே பார்ப்போம்.

                பத்தினி ஒருத்தியின் கற்பொழுக்கத்தைக் களங்கப்படுத்தும் வகையில் பொய் சொன்னான் ஒரு கொடியவன். அவள் அறவோர்கள் முன்னிலையில் வழக்குக் தொடுத்தாள். அவளைப் பார்த்து சாட்சி உண்டா என்று கேட்க. அவள் உண்டுவன்னிமரமும் மடைப் பளியும்என்று சொன்னாள். வந்து சாட்சி சொல்லுமா என்று கேட்க வன்னி மரமும் மடைப்பளியும்தன் கற்பின் வலிமையால் வரவழைக்கப்பட்டாள் அவள் ஒரு பத்தினி என்று கூறுகிறாள்.

. . . . . . . . . . . . . . . நற்பகலே

வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக

முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள்

காவிரி கடலொடு கலக்குமிடத்திலே தன் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தாள் ஒரு நங்கை அவள் மணலால் பிடித்த உருவத்தைக் காட்டிஇந்த மணற்பாவைதான் நின் கணவன்என்றனர் தோழியர். அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டதனால் மணற்பாவை பிடித்த கன்னியானவள்  தன் வீட்டிற்குத் திரும்பாமல்  கடற்கரையிலேயே இருந்து கொண்டு  தான் பிடித்த மணற்பாவையை தன் தோழியர் தனக்குக் கணவனாக்கியதை-அலைகள் வந்து அழித்துவிடாமல் காவல் காத்தாள். அவள் ஒரு பத்தினி

“……………………………………..பொன்னிக்

கரையில்மணற்பாவை நின்கணவன் ஆம்என்று

உரைசெய்த மாதரொடும் போகாள்  திரைவந்து

அழியாது சூழ்போக  ஆங்கு உந்தி நின்ற

வரிஆர் அகல் அல்குல் மாதர்

கற்புடைய மகளிரில் பெயர் சுட்டி சங்க இலக்கியத்தினின்று தொடருகின்றது. ஆதிமந்தியின் கதை. “கரிகால் வளவன் மகள் ஆதிமந்தி  தன் கணவன் ஆட்டனத்தி என்பவனுடன் காவிரியாற்றங்கரையில் இருந்தபோது  ஆற்று வெள்ளமானது அவனை அடித்துக் கொண்டு போய்க் கடலில் சேர்த்து விட்டது. அதுகண்டு வேதனையடைந்தவளாகிமலைபோன்ற தோள் படைத்தவனே!” என்று கதறினாள் ஆதிமந்தி. அந்தப் பத்தினியின் கதறலைக் கேட்டு  கடலானது ஆட்டணத்தியைக் கொண்டுவந்து அவள் முன் நிறுத்திக் காட்டியது ஆதிமந்தியும் தன் கணவனைத் தழுவிக் கொண்டு ஊர் திரும்பினாள்  அவள் ஒரு பத்தினி.

“…………………………………….உரைசான்றி

மன்னன் கரிகாலன் வளவன் மகள் வஞ்சிக்கோன்

தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று

கன்னவில் தோளாயோ!” என்னக் கடல்வந்து

முன்னிறுத்திக் காட்ட  அவனைத் தழீஇக்கொண்டு

பொன்னங் கொடிபோலப் போதந்தாள்.”

தன் கணவன் கடல் மார்க்கமாக அயல்நாடு சென்ற போது அவன் திரும்பி வருமளவும் கடற்கரையில் கல்லுருவம் கொண்டு நின்றாள் ஒரு நங்கை. தன் கணவன் திரும்பி வந்த நாளில் கல்லுருவம் நீத்து  பழைய உருவத்தைப் பெற்றாள். அவள் ஒரு பத்தினி

“……………………………………..மன்னி

மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்

கணவன் வரக் கல்லுருவம் நீத்தாள்;”

பொதுவாக பத்தினிப் பெண்டிர் வரலாறுகள் இந்த இயற்கையிகந்த அமைப்பை ஒட்டியே அமைகின்றன. கண்ணகியின்வரலாறும் இதனொடு அமைவதே ஆயின் பிற பத்தினிப் பெண்டிர் தம் ஆற்றல் அவர்தம் வாழ்க்கை வட்டத்தோடு அமைந்துவிட கண்ணகியின் ஆற்றல் தீமையை அழிக்கும் ஆற்றலாக விரிந்து மதுரையை எரித்து விடுகின்றது. தன்னளவில் அமையாது அறம் மறம் என்ற பெரும் போராட்டக் களத்தில் இவள் சீற்றம் பொருந்தியமையே இவளை மறக்கற்புடைச் செல்வியாக வீரக் கண்ணகியாக அமைகின்றார் அடிகள்என்று .வே. சுப்பிரமணியம் கூறுகிறார்.

கற்பு வாழ்க்கை நடத்திய ஒருத்தி  தன் மாற்றாளின் குழவி கைதவறிக் கிணற்றில் விழுந்துவிட  அவளது துயரிலே தானும் பங்கு பெற விரும்பி  தன் குழந்தையையும் கிணற்றில் வீழ்த்தினாள். அவளது தியாகச் செயல்கண்டு கிணற்று நீர் மேலே பொங்கியெழுந்து  இரண்டு குழந்தைகளையும் அவளிடம் தந்துவிட்டது. அவள் ஒரு பத்தினி.

மாற்றாள் குழவிவிழத் தன் குழவியும் கிணற்று

வீழ்த்து  ஏற்றுக் கொண்டெடுத்த வேற் கண்ணாள்.”

ஏதிலான் பார்வைக்கஞ்சிக் குரங்குமுகம் அடைந்து கணவன் வர அம்முகம் நீங்கியவள் அவள் ஒரு பத்தினி

“…………………………………..வேற்றொருவன்

நீன்நோக்கம் கண்டுநிறைமதி வாள் முகத்தைத்

தானோர் குரக்குமுகம் ஆக!” என்று  போன

கொழுநன் வரவே  குரக்குமுகம் நீத்த

பழுமணி அல்குற்பூம் பாவை.”

பிள்ளை பிராயத்திலே தோழியர் இருவர் ஒருவர் பெண்ணுக்கு மற்றவர் பிள்ளை கணவன் என்ற வார்த்தையை உண்மையாகக் கொண்டு தலையிலே பாவையாகக் கணவனைச் சுமந்தவள். பூம்புகாரில் மக்களிடையே அந்நாளில் வழங்கி வந்த பத்தினியர் பற்றிய கதைகளை கூறி தானும் அவள் போன்றவளே எனக் கூறுகிறாள். நான் பத்தினி யாகலின் இம்மதுரையை எரிப்பேன் என்று சூளுரைக்கிறாள்.

பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமகில்

ஓட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என

பட்டிமையும் காண்குறுவாய் நீ           (சிலம்பு:21:36 37)

தன்னைப் பத்தினி என்று காட்டி கொள்ள  விரும்பிய ஆணவமே கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கச் செய்தது. அதனை அவளே தன் பட்டிமையாக  கூறி கொள்வது எவ்வளவு பொருத்தமுடையது என்னே ஆணவத்தின் பிடிப்பு  இதன் அறிவேஇறைநிலை எய்தல்என்பது எத்தகைய பேருண்மை25 என மார்க்கபந்து சர்மா கூறுகிறார்.

புகார் நகரில் சாதாரண குடியில் பிறந்த ஒரு பெண்ணை பத்தினித் தெய்வமாக்கியிருக்கிறார் இளங்கோவடிகள். அதற்கு அவள் பிறந்த நாட்டில் வாழ்ந்த ஏழு கற்புடைய மகளிரின் கதையைக் கூறிதானும் அவர்களைப் போன்றவளே என்று நீருபிக்கிறாள் கண்ணகி”.26

கண்ணகி மதுரை மாநகரம் முழுவதும் தீக்கிரையாக்க எங்கும் புகை சூழ்ந்து காணப்பட்டது. அப்போது பாண்டியனின் குலதெய்வம்மதுராபதிதோன்றினாள். மதுராபதித் தெய்வம் கண்ணகியுடன் நேர் எதிரே நிற்கவில்லை.

எதிரில் நேரே நிற்பது எதிரி எனப்படுவான் அவன் பகைவனேயாவன். கோயிலில் இறைவன் முன்னர் நேராக நிற்காமல் ஒரு பக்கமாக நின்று வணங்குவதும் இக்கருத்தையொட்டியதே ஆகும்”27 என .சிவலிங்கனார் கூறுகிறார்.

கண்ணகி தெய்வம் ஆகப் போகிறவள். மதுரையை எரித்த பேராற்றல் பெற்றவள். அதனால் தான் கற்புடைய தெய்வத்தின் முன் நிற்காமல் மதுராபதித் தெய்வம் பின்னே சென்றது. இங்கு அடிகள் கண்ணகியை மறைமுகமாகத் தெய்வமாக்கியுள்ளார்.

கொங்கைத்தீயில் வரும் கண்ணகி மனிதப்பெண். அவளை நான் தெய்வமாக்க முயலவில்லை. அவளைப் பத்தினி தெய்வம் ஆக்குவதுதான் ஆணுக்குத் தேவையான தற்காப்பு சௌகர்யம்என்கிறார் இந்திர பார்த்தசாரதி.

சிலப்பதிகாரமும் வெள்ளிக்கிழமையும்

                சிலம்பிலே கண்ணகி மதுரையை எரித்த நான் வெள்ளிக்கிழமை. வெள்ளிகிழமை தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்தநாளாக விரதம் மேற்கொள்கின்றனர். இக்கண்ணகியே தமிழகத்தில் மாரியம்மனாக வழிபடுகின்றனர். கண்ணகி மதுரையை எரித்தநாள் வெள்ளிக்கிழமை என்ற குறிப்பு சிலம்பில் காணப்படுகின்றன.

                ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து

                ஆழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று

                வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண

                உரைசால் மதுரையொடு அரைசுகேடுறும் எனும்

                உரையும் உண்டே நிரைதொடியோயே!”  (சிலம்பு :23: 133  137)

கண்ணகி மதுரையை எரித்த நாள் ஆடிமாதம் கிருஷ்ண பட்சம் எட்டாம் நாள்  கார்த்திகையும் பரணியும் சேர்ந்திருந்த வெள்ளிக்கிழமை28”

                தமிழ்நாட்டில் பெண்கள் வெள்ளிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளித்து  அன்று ஏதேனுமொரு பெண் தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று அத்தெய்வத்தை வழிபடுகின்றனர். குறிப்பாக மாரியம்மன் கோயில்களில் ஏராளமாகக் குழுமி அத்தெய்வத்திற்கு வழிபாடு செய்கின்றனர். இவ்வழிபாடு கண்ணகி வழிபாடாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

                கண்ணகி மதுரையை எரித்துவிட்டு சேரநாடு அடைந்து தன்கணவன் கோவலனுடன் வானுலகு செல்கிறாள். இச்செய்தியை கேள்விப்பட்ட சேரன் செங்குட்டுவன் வேண்மாளை நோக்கிகணவன் உயிர் நீத்தவுடன் தன் உயிரையும் நீத்த பாண்டிமாதேவி  சினத்தோடு நம் சேரநாடு வந்த கண்ணகி. இவர்களுள் வியக்கத்தக்க பத்தினி யார் என்று கேட்க.

காதலன் துன்பம் காணாது கழிந்த

மாதரோ பெருந்திரு உறுக வானகத்து

அத்திறம் நிற்க நம் அகலநாடு அடைந்த இப்

பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்      (சிலம்பு :25 : 11  14)

என்று கூறுகிறாள்.

                தன் கணவனின் துன்பத்தைக் காணாது தன் உயிர் துறந்த பாண்டிமாதேவி வானகத்துக்குச் சென்று விட்டாள். அங்கு அம்மாபெரும் பத்தினி பேரின்பத்தை அடைவாளாக! நமது அகன்ற நாட்டினைத் தானே விரும்பி வந்தடைந்த இப்பத்தினிக் கடவுளைப் போற்றி வழிபட வேண்டும் என்று கூறுகிறாள். சேரன் செங்குட்டுவன் இமயமலையில் இருந்து கண்ணகி கல் எடுத்து வந்து கோயில் கட்டி வழிபடுகிறான். இறுதியில் கண்ணகி வாழ்த்தும் வரமும் கொடுத்து மறைகிறாள்.

                மண்ணக மாதர்களுக்கு முன் ஊதாரணமாகவும் விண்ணக மாதர்களுக்கு விருந்தாகவும் கண்ணகி அமைந்தால் என்பதை இளங்கோவடிகள் தன் வாக்காலே பார்ப்போம்.

தெய்வம் தொழாஅள்  கொழுநன் தொழுவாளைத்

தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய்

மண்ணக மாதர்க்கு அணியாய் கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து                (சிலம்பு)

                மண்ணக மாதர்க்கெல்லாம் அணிபோல்பளான கண்ணகியானவள் தெய்வமாகி  விண்ணக மாதர்க்கு விருந்தினளாயினாள். “தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழும் தகைமையும்இவ்வுலகிலே இதனால் உறுதியாயிற்று எனலாம். திருக்குறளின் சான்றாக

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யென பெய்யும் மழை      (குறள் : 55)

என்ற குறளுக்கு தக்க சான்றாக கண்ணகி திகழ்கிறாள்.

                கற்புடை மகளிர் வரிசையில் நினைக்கப்பெறும் திரௌபதி  சாவித்திரி  அகலிகை  சீதை  நளாயினி  அவரோடு கண்ணகியை ஒருங்கு வைத்து எண்ணுமாறு அடிகள் அமைக்கவில்லை  தனித்தமிழ்ப் பத்தினியாக உயர்த்தியுள்ளார். வாழ்வில் அறக்கற்பில் பொருந்திக் கணவன் தாழ்வில் வீரக்கற்பில் பொலியும் அவள்  தன் வாழ்வின் விருப்பு வெறுப்புக்களால் மட்டும் கட்டுண்டு அமையவில்லை அறம் கனன்று அறமற்றவற்றைச் சிதைக்கும் கடவுட்பணியில் நிலைக்கின்றாள். எனவே தான் இன்றும் அறனல்லனவற்றைச் சிதைக்கும் துர்க்கையின் தோற்றமாக மக்கள் இதயத்தில் இடம் பெற்றுள்ளாள்”29 என .வே.சுப்பிரமணியன் கூறுகிறார்.

                கண்ணகி கற்புடைத்தெய்வமாக மக்களால் இன்றளவும் போற்றப்படுகிறாள். கண்ணகி வழிபாடே காலப்போக்கில் மாரியம்மன் வழிபாடாக தோற்றம் பெற்றன. கிராமங்களில் கண்ணகியை மாரியம்மன் தோற்றத்தில் வழிபட்டு வருகின்றனர். கண்ணகி நாட்டுபுறத் தெய்வமாக பத்தினி தெய்வமாக வழிபடபடுகிறாள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்