Ticker

6/recent/ticker-posts

பி.எஸ். ராமையாவின் சிறுகதைகளில் இறை நம்பிக்கை

 

       

பி.எஸ். ராமையாவின் சிறுகதைகளில் இறை நம்பிக்கை

                காட்டுமிராண்டியாக வாழ்ந்து வந்த மனிதன் முதலில் இயற்கையைக் கடவுளாகக் கொண்டு வணங்கி வந்தான். பிற்காலத்தில் தன்னைக் காத்த தம் குலம் சார்ந்த வீரனைக் கடவுளாகப் போற்றி வணங்கினர். இதனைத் தமிழ்ச் செவ்வியல் இயக்கியமான சங்க இலக்கியங்களின்வழி அறிந்துகொள்ள முடிகிறது. பக்தி இலக்கிய காலத்தில் உருவ வழிபாடுத் தோன்றி மனித உருவில் கடவுளை உருவகித்து வழிப்படத் தொடங்கினர். அதன் தொடர்ச்சிப் பிற்காலத்திலும் தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. இறை நம்பிக்கையோடு தோன்றிய இலக்கியங்கள் உரைநடை இலக்கியக் காலத்திலும் தொடர்ந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையாவின் சிறுகதைகளில் இறை நம்பிக்கைச் சார்ந்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

மணிக்கொடி பி.எஸ்.ராமையா

சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் பெறுபவர் பி.எஸ். ராமையா அவர்கள். இவரில்லாவிடில்மணிக்கொடிதோன்றியிருக்க முடியாதென்பதையும் அது நன்கு நடந்திருக்க முடியாததென்பதையும் மணிக்கொடி இதழ் வழி தெரிந்த ஒன்று. சிறுகதையின் வளர்ச்சிக்கு நிறுவன முறையில் இவர் ஆற்றிய சேவையளவு சிறப்பினைச் சிறுகதை இலக்கியத்திற்கு இவர் எழுதிய சிறுகதைகள் அளிக்கவில்லை என்பது உண்மையே.

                மணிக்கொடிக் காலம் தொட்;டு இன்று வரை ஆக்க இலக்கியம் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆரம்ப காலத்திலேயே சிறந்து விளங்கின. 1947 க்குப் பின்னர் இவர் தலைசிறந்த நாடகாசிரியராகப் பரிணமித்துள்ளார். (பி.எஸ்.ராமையா மணிக்கொடி காலம் .21)

                மத்தியதர வர்க்கத்தினரது வாழ்க்கையினடியாகத் தோன்றும் உணர்ச்சிக் கட்டங்களைச் சித்திரிப்பதில் இவர் சிறந்து விளங்கினார். ‘அடிச்சாரைச் சொல்லியழு’‘நட்சத்திரதக் குழந்தைகள்மலரும் மணமும்இவரது சிறந்த சிறுகதைகள்.

                விடுதலைப் போராட்டகாலத்தில் சிறந்து விளங்கிய மணிக்கொடி என்ற இதழின் ஆசிரியராக 1935 -ல் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து இவ்விதழ் சிறுகதை இதழாக உருமாற்றம் பெற்றுவிட்டது. தினமணிக்கதிர் வாரப் பதிப்பிலும் பல சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது கதைகளில் பரந்த உளவியல் அனுபவம் ஆழ்ந்த பார்வை இன்ப துன்பங்களை உள்ளவாறு உணரும் உணர்வு முதலியன நிறைந்து காணப்படுகிறது. அதோடு கடவுள் நம்பிக்கை சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் சிறந்து விளங்குகிறது. (சி.சு.செல்லப்பா பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி பக்.12-35)

இறை நம்பிக்கை

                இறை நம்பிக்கை என்பது இறைவனின் மீது கொண்ட பக்தியின்வழி வெளிப்படும் ஒருவிதமான ஈர்ப்பு ஆகும். இவை கடவுளின் மீது அதீத நம்பிக்கைக் கொண்டு வழிபாடு செய்தல் விரதம் இருத்தல் என செய்து அவற்றின் இறைத் தன்மையை பெற முயற்சி செய்வதாகும்.

                சமூகத்தில் உள்ள குறைகளை நீக்கி மக்களை நல்வழிப்படுத்தக் கூடிய ஆற்றல் இறைவனுக்கு உண்டு என்னும் நம்பிக்கையுடையோர் கொண்ட நெறியே சமய பக்திநெறி ஆகும். சமய பக்தி இலக்கியங்கள் தோன்ற பல காரணங்கள் உள்ளன. இவை சமய பக்தி இலக்கியங்களின் அடிப்படை கொள்ளைகளாக விளங்;குகின்றன. இறைவன் எல்லா வகையிலும் சக்தி நிறைந்தவன். அவனை மிஞ்சிய செயல் இவ்வுலகில் எதுவும் இல்லை என்பதே பக்தி சமயமார்களின் கொள்கைகளாகும். அதனடிப்படையில் இறைவனை போற்றுதல் என்பது அனைவருடைய வாழ்விலும் அன்றைய சமூகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. (.இராஜா திருநாவுக்கரசர் காட்டும் சமுதாய நெறிகள் .6)

                இதற்கான எதிர்ப்புகள் நிலவிவந்த நிலையிலும் தங்களுடையக் கொள்ளையை பக்தி சமயமார்கள் தொடர்ந்து கோலோட்சி வந்தனர். தெய்வத்தை முன்னிருத்தி மனிதன் அனைத்தையும் செயல்படுத்துகிறான். உலகில் இயங்கும் அனைத்து இயக்கங்களின் செயல்பாட்டிற்கும் தெய்வம்தான் ஆக்க சக்தி என்ற உணர்வினை தன்னுள் ஏற்றுக்கொள்கிறான்.

                கடவுள் ஒன்று என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் சமுதாயத்தில் வேற்றுமைகள் பொறாமைகள் களவு கொலை போன்ற தீய எண்ணங்கள் விலகி மனிதநேயம் உயர்ந்து மக்களின் வாழ்க்கை சிறக்கும். இதன்மூலம் மனிதவாழ்வு உதவியாக செயல்படும்.

                இறைவனும் தானும் ஒன்று என்று சொல்லுகிற அளவிற்குக் கடவுள் பற்றிய நம்பிக்கை மனிதனுக்கு உண்டானபோது அதனை வெளிப்படுத்த மொழியின் மூலமாய் வடித்த பாட்டு வடிவம் இலக்கியமாகிறது. (மேலது .34)

                கடவுள் பற்றிய கொள்கைகள் தொல்காப்பியர் காலத்திலே இருந்தன. மாயோன் வழிபாடு பழந்தமிழர் வழிபாடாதலை

                                மாயோன் மேய காடுறை உலகம்” (தொல். பொருள்)

என்ற தொல்காப்பிய அடி சுட்டும்.

                                பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்” (பெரும்பாண்.)

எனப் பெரும்பாணாற்றுப்படையும்

                                புள்ளின நீள்கொடிச் செல்வன்

எனத் திருமுருகாற்றுப்படையும் திருமாலைப் பற்றிக் குறிப்பிடும்.

                சங்க காலத்திற்குப் பின் சமண பௌத்த சமயங்களால் நலிவுற்ற வழிபாடு நாயன்மார்கள் ஆழ்வார்களால் மீண்டும் மறுமலர்ச்சி அடைந்தன. இறைவன் குணங்களால் ஆழ்ந்து ஈடுபடுபவர் எனும் பொருளில்ஆழ்வார்என்ற பெயர் வைணவ அடியார்க்கட்கு ஏற்பட்டது. எனலாம். (கா.கோ.வெங்கடராமன் தமிழ் இலக்கிய வரலாறு .166)

                சங்க காலத்தையும் நீதிநூல் காலத்தையும் அடுத்துத் தெளிவாகக் காணப்படுவது பக்தி இயக்க காலம் ஆகும். தமிழகத்தில் சமண பௌத்த சமயங்களுக்கு எதிராகச் சைவமும் வைணவமும் அணி திரண்டன. சமண பௌத்த சமயங்கள் வலியுறுத்திய அறம் கொல்லாமை போன்ற விழுமியங்களை ஏற்றுக்கொண்டு அச்சமயங்கள் முன்னிறுத்திய துறவு நெறியை சைவ வைணவ சமயங்கள் மேற்கொண்ட இயக்கத்தைப் பக்தி இய்யகம் என்பர்.

                பக்திஇயக்கம் நாயன்மார்களில் காரைக்கால் அம்மையாரிடமிருந்தும் திருமூலரிடத்தும் தொடங்கியது. ஆழ்வார்களில் பேயாழ்வார் பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார் ஆகிய முதல் ஆழ்வார் மூவராலும் தொடங்கியது என்பார் மு.. அவர்கள். (தெய்வசுமதி தமிழர் வளர்ச்சியில் சமயம் சார்ந்த நூல்கள் .32)

பி.எஸ்.ராமையாவின் இறை நம்பிக்கை

                பி.எஸ்.ராமையா ஐயர் இன சமூகத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் இயல்பாகவே அவரிடத்தில் இறை சார்ந்த நம்பிக்கைகள் இருந்தன. அதனடிப்படையிலே தம் படைப்புகளில் கடவுள் சுவாமி தெய்வம் பெயர்களைப் பயன்படுத்தி கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை பதிவும் செய்துள்ளார். பி.எஸ்.ராமையா கடவுள் என்ற பெயரில் குல ஆதிக்கத்தையும் இன அடக்குமுறைகளையும் சாதி வேறுபாட்டையும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டி அவற்றைக் களைக்க துணைநின்றவர். கடவுள் சார்ந்த நம்பிக்கையை நல்வழிப்படுத்துவதற்காகவும் சமுதாய மாற்றத்திற்காகவும் சமூக மறுமலர்ச்சிக்காகவுமே தம் படைப்புகளில் கடவுள் தெய்வம் சார்ந்த நம்பிக்கைகளை பி.எஸ்.ராமையா வெளிக்காட்டியுள்ளார்.

                நட்சத்திரக் குழந்தைகள்என்னும் சிறுகதையில் வாய்மையை முன்னிருத்தும் விதமாக பொய்மையை விடுத்து ஒவ்வொருவரும் ஒரு உண்மையைப் பேசினால் வானத்தில் ஒரு நட்சத்திரம் பிறக்கும் என்று கூறுகிறார். அந்த வானத்து நட்சத்திரங்கள் சுவாமியின் குழந்தைகள். சுவாமியைப் போன்று நட்சத்திரங்களும் அழகானவர்கள் என்று குழந்தை ரோகிணிக்கு கடவுளின்வழி அறக்கருத்தை வலியுறுத்துகின்றனர். (நட்சத்திரக் குழந்தைகள் பக்.9-17)

                புதுமைக் கோயில்என்னும் கதையில் சாதி சமய வர்க்க வேறுபாட்டை கடவுளின்வழி கட்டுடைப்பு செய்கிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முனியன் ஏழை அவன் வேலை செய்யும் முன் கடவுளை வணங்குகிறான். அவன் கட்டையை வெட்டும்போது தவறிவிழுந்த கோடாரி அவன் கால்நோக்கி பாய்ந்தது ஆனால் அவன் கால் வெட்டப்படவில்லை. கடவுள் தான் அவனைக் காப்பாற்றியது. முனியன் கட்டை வெட்டிய அதே இடத்தில் குழந்தை ரோகிணி கோயிலைக் கட்டி அங்கு சுவாமி கிருஷ்ணரை அமர்த்தினாள். அந்த புதுமைக் கோயிலில் ஏழையான முனியனையும் படித்த பணக்காரனான தன் தந்தை சோமசுந்தரத்தையும் ஒன்றாக சுவாமி கும்பிட அழைத்து சாதி சமய வேறுபாட்டை கலைக்கிறாள். இங்கும் கடவுளையே முன்னிலைப்படுகிறார் பி.எஸ்.ராமையா. (புதுமைக் கோயில் பக்.19-26)

                குழந்தையும் தெய்வமும்என்னும் சிறுகதையில் வறுமையின் பிடியில் சிக்கிதவித்த தைலுவின் குடும்பத்தில் இரண்டுநாள் உண்ண உணவில்லாமல் இருந்த நேரத்தில் கோமு அந்த பலராமனை வேண்டிக்கொண்டாள். அதன் பலன்தான் நடராஜ ஐயர் வழி அவர் குழந்தை சுந்தரத்தை பார்த்துக்கொள்ள வேலைவாங்கித் தந்தது. தம் வறுமையைப் போக்க வந்த குழந்தை சுந்தரம் அந்த சுவாமி கிருஷ்ணர் தான். மெய்யாகவே சுந்தரம் கிருஷ்ணர் தான் என்று கோமுவின் வழி கடவுள் நம்பிக்கையை இங்கு வெளிக்காட்டுகிறார். (குழந்தையும் தெய்வமும் பக். 48-60)

                கடவுளாக வந்த டாக்டர்என்னும் சிறுகதையில் கண்டெக்டர் ஆதிகேசவலு மனைவி ரஞ்சிதம் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டிருந்தாள். அவளை பெரிய இடத்தில் மருத்துவம் பார்க்க அவனுக்கு வசதியில்லை. பக்கத்து வீட்டுக் கிழவி கசாயம் கொடுத்து கொஞ்சம் வலியை போக்க செய்தாள். அதோடு தம் குலதெய்வத்திற்கு காணிக்கை முடித்து வைக்கசெய்தாள். கடவுள் நம்பிக்கை இல்லாத ஆதிகேசவலு அவள் சொன்னதைப்போல தன் குலதெய்வமான வெங்கடேச பெருமானை நினைத்து காணிகை முடித்துவைத்தான். மீண்டும் வலி ஆரம்பம் ஆனது. வேலைக்கு சென்ற ஆதிகேசவலுக்கு தன் மனைவி தீராத வயிற்றுவலியால் மீண்டும் அவதிப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி வந்தது. அதனை நினைத்து வேலையில் நிலைபடாமல் பயணிகளிடம் எரிந்துவிழுந்தான். அப்போது வழியில் ஏறிய ஒரு பயணி ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினான். சரியான சில்லறைக் கொடுக்கும்படியும் இல்லையேல் மீதி பணத்தை நாளைக்கு காரியாலத்தில் வந்து பெற்றுக்கொள்ளவும் என்று எழுதிக்கொடுத்தான். வீட்டிற்கு வந்து பார்க்கும்போது மனைவி வலியில்லாமல் படித்து கிடந்தாள். அதனை விசாரித்த ஆதிகேசவலுக்கு நீங்க அனுப்பியதாக தான் ஒருவர் வந்து அவளுக்கு ஊசி குத்திட்டு போனதாக சொன்னார்கள். ஆனால் பேருந்தில் வந்தவர்தான் அவன் நிலை அறிந்து வந்து உதவியிருக்கிறான். அவளைக் காப்பாற்றியது மெய்யாகவே தெய்வம்தான் என்று அந்த ஊரெல்லாம் பரவி அவளை வந்து மக்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கடவுள்தான் ஆபத்தில் உதவியிருக்கிறார் என்ற கடவுள் நம்பிக்கையை இங்கு பதிவிடுகிறார். (தெய்வமாக வந்த டாக்டர் பக்.63-75)

                கொத்தனார் கோயில்என்னும் கதையில் ஆபத்தில் பகைவர்களின்பிடியில் சிக்கிதவித்த ஊரையும் ஊரில் இருந்த நகைகளையும் செல்வங்களையும் போர் வாள்களையும் தன் அறிவின் திறத்தால் காப்பாற்றி@ வானில் மின்னிய சிறு மின்னலால் பகைவர்களிடம் சிக்கிகொண்டு தன்னுயிர் நீத்தார் கொத்தனார் பரமசிவம் பிள்ளை. அவர் ஊரையும் ஊர் மக்களையும் ஊரில் இருந்த செல்வங்களை எல்லாம் காப்பாற்றி பகைவர்களிடம் யாதையும் காட்டிக்கொடுக்காது அதற்காக அவர்களால் தீயிலிட்டு கொல்லப்பட்டான். இந்த தியாக செயலுக்காக அவனுக்கு கோயில் கட்டி அவனை ஊரைக் காக்கும் தெய்வமாக போற்றி வணங்குகின்றனர். (கொத்தனார் கோயில் பக்.112-121)

                சங்க காலத்திலும் தன் குலத்தையும் தன் நாட்டைக் காத்த வீரர்களே பிற்காலத்தில் தெய்வமாக வணங்கப்படுவது நாம் அனைவரும் அறிந்த செய்தியே.

                அடுத்துமுள்ளிப்பாளையம் மொட்டைக் கோபுரம்என்னும் கதையில் முள்ளிப்பாளையம் என்னும் ஊரில் உள்ள முள்ளிநாதர் ஆலயம் பிரசித்திப்பெற்றது ஆகும். அந்த ஆலய கோபுரம் நீண்ட நாட்களாக சிதைந்து காணப்பட்டது. அதனை சரிசெய்வதற்காக ஊரார் வக்கில் சதாசிவய்யரிடம் வந்து உதவிக் கேட்டனர். ஐயர் அதற்காக சில யோசனை செய்து அதற்காக விடையைக் கண்டுணர்ந்தார். ஒரு லட்ச ரூபாய்க்கு சீட்டு நடத்தி அதன்மூலம் ஆலயம் கோபுரத்தை சரிசெய்வது என்று முடிவு எடுத்து அதில் பாதி பரிசு தொகையாக எடுத்துவிட்டு மீதி பணத்தை வைத்து கோபுர திருப்பணியை முடிக்கலாம் என்றது அனைவரும் ஏற்றனர். அதில் ஒரு விதியை வகுத்தார். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் எவ்வளவு செலவானாலும் அதை தானே ஏற்பதாகவும் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் சீட்டை வாங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். ஆனால் அவனுடைய மகள் கணவன் சிதம்பரம் ஐயருக்கு தெரியாது தனக்கு பிறக்க போகும் பிள்ளையின் பெயர் சிரஞ்சீவி சௌந்தரராஜன் என்ற கடவுளின் பெயரில் ஒரு சீட்டை வாங்கிவிட்டான். அந்த எண்ணிற்கே முதல் பரிசும் விழுந்தது. அதனை அறிந்த யங்ஙமன ஐய்யர் பிறக்காக் குழந்தைக்கு பரிசு விழுந்தது செல்லாது என்று வழக்கு போட்டார். வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்று சதாசிவய்யரே வெற்றிபெற்றார். அவர் போட்ட சட்டவிதி தெய்வ சித்தியால் அவருக்கே நேர் எதிரானது. (முள்ளைப்பாளையம் மொட்டைக் கோபுரம் பக்.123-134)

                இதுபோன்ற இறை நம்பிக்கை சார்ந்த பதிவுகளை பி.எஸ்.ராமையா தன் சிறுகதைகளின்வழி வெளிக்கொணர்ந்துள்ளார்.

நிறைவுரை

                தன்னை விடாது வேண்டுபவர்களுக்கு இறைவன் நன்மையையே செய்வான் என்பதை புதுமைக் கோயில் கதையிலும் அறத்தை வலியுறுத்தும் விதமாக வானில் பிறக்கும் நட்சத்திரங்கள் கடவுளின் குழந்தைகள் என்றும் வறுமையில் வாடிய நிலையில் இறைவனை இறங்கி வேண்டிக்கொள்வாயின் அவன் மாற்றோர் வழியில் உதவிசெய்வான் என்பதை குழந்தையும் தெய்வமும் என்னும் கதையிலும் தன் கடினமான காலத்தில் ஆபத்தில் உதவுபவனே கடவுளாக போற்றி வணங்குவான் என்பதை தெய்வமாக வந்த டாக்டர் என்னும் கதையிலும் பி.எஸ்.ராமையா வெளிக்காட்டியுள்ளார்.

                இறை நம்பிக்கை என்பது எல்லாக் காலத்திலும் எல்லோரிடத்திலும் இருந்து வந்துள்ளது என்பதை இவரின் படைப்புகளின்வழி அறிய முடிகிறது. 

 

பயன்பட்ட நூல்கள்

1. பி.எஸ்.ராமையா புதுமைக்கோயில் சிறுகதைத் தொகுப்பு

2. சி.சு.செல்லப்பா பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி

3. பி.எஸ்.ராமையா மணிக்கொடி காலம்

4. கா.கோ.வெங்கடராமன் தமிழ் இலக்கிய வரலாறு

5. தெய்வசுமதி தமிழர் வளர்ச்சியில் சமயம் சார்ந்த நூல்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்